|
150 சிறிய" தமிழ்ப்பள்ளிகளின்
எதிர்காலம்
சிறிய" பள்ளிகள் என்று உண்டா?
ஜா. சுகிதா
பள்ளிக்கூடம் என்றால்
மாணவர்களுக்கு ஆசிரியர்களைக் கொண்டு கல்வி போதிக்கும் இடம்.
மாணவர்களுக்குக் கல்வி போதிக்கும் இடம், பள்ளிக்கூடமாகச் செயல்பட
அரசின் அனுமதி இருக்க வேண்டும். ஒரு மாணவனைக் கொண்டதும்
பள்ளிக்கூடமாக இருக்கலாம். ஆயிரம் மாணவர்களைக் கொண்டதும்
பள்ளிக்கூடமாக இருக்கலாம். ஆனால் மலேசியக் கல்விச்சட்டம் 1996 இன்
கீழ் பள்ளிக்கூடம் என்றால் பத்து அல்லது அதற்கும் அதிகமான
மாணவர்களைக் கொண்டு ஒன்று அல்லது அதற்கும் அதிகமான வகுப்புகளில்
வழக்கமாகக் கல்வி போதிக்கப்படும் இடம். (School" means a place
where ten or more persons are habitually taught whether in one
or more classes ..." - Education Act 1996).
கல்வி கற்பிக்கும் இடம்
9 மாணவர்களைக் கொண்டிருந்தால், அது பள்ளிக்கூடம் இல்லை. பத்து
அல்லது அதற்கும் அதிகமான மாணவர்களைக் கொண்டது பள்ளிக்கூடம். இதில்
சிறிய" அல்லது பெரிய" பள்ளிக்கூடம் என்ற பேச்சுக்கே சட்டத்தில்
இடமில்லை.
சிறிய அல்லது பெரிய பள்ளிக்கூடம் என்று மக்கள் பேசலாம்; அமைச்சர்கள்
பேசலாம்; பார்ப்பதற்கு ஒரு பள்ளிக்கூடம் சிறியதாக அல்லது பெரியதாகத்
தெரியலாம். ஆனால் அப்பள்ளிக்கூடம் சிறிய" அல்லது பெரிய"
பள்ளிக்கூடம் என்ற பேச்சுக்கே சட்டத்தில் இடமில்லை. சட்டப்படியான,
சட்டத்திற்கு உட்பட்டு இயங்கும், ஒரு பள்ளிக்கூடத்தை மூடும்
அதிகாரத்தைக் கல்விச்சட்டம் கல்வியமைச்சருக்கு வழங்கவில்லை.
150 சிறிய" தமிழ்ப்பள்ளிகள்
நாடு சுதந்தரம் அடைந்த அன்று 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன என்பது
ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இன்று மீதம் இருப்பவை 523
பள்ளிகளாகும்.
அந்த 523 பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள்
150 அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 50க்கும் குறைவான
மாணவர்களைக் கொண்டுள்ளதால் அந்த 150 பள்ளிகளையும் சிறிய" பள்ளிகள்
என்று கூறப்படுகிறது. அவை பள்ளிக்கூடங்கள், சிறிய" பள்ளிக்கூடங்கள்
அல்ல. அவற்றை மூடும் அதிகாரம் எந்த அமைச்சருக்கும் கிடையாது.
ஏனென்றால், அவை ஒவ்வொன்றும் 10க்கும் அதிகமான மாணவர்களைக்
கொண்டிருக்கின்றன.
2005 ஆம் ஆண்டில் 138 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 318 (சிறிய")
தமிழ்ப்பள்ளிகள் மற்றப் பள்ளிகளுடன் இணைக்கப்படும் என்று
கூறப்பட்டது. (தமிழ்நேசன் 9.9.2005)
2006 ஆம் ஆண்டில் கல்வியமைச்சரின் தேசியக் கல்வி வளர்ச்சி வரைவு
2006 - 2010 இல், பக்கம் 93, 150க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட
பள்ளிகள் குறைந்த மாணவர்கள் பதிவுடையப் பள்ளிகள் (சிறிய"?) என்று
கருதப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டில் 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 150" (சிறிய")
தமிழ்ப்பள்ளிகள் இருப்பதாக ஓர் அமைச்சர் கூறியுள்ளார். (தமிழ்நேசன்
29.06.2007)
நமக்குத் தெரிந்தவரையில் கல்விச்சட்டம் 1996இல் காணப்படாத சிறிய"
பள்ளி என ஒன்று அறிக்கைகள் வழி தெரிய வந்துள்ளது. முதலில்
138க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டது சிறியது; இரண்டாவது,
150க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டது; மூன்றாவது 50க்கும்
குறைவான மாணவர்களைக் கொண்டது. திடீரென்று, ஓர் அமைச்சர் 3
மாணவர்களைக் கொண்ட பள்ளி சிறியது என்று கூறக்கூடும். இன்னொரு
அமைச்சர் 500க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளி சிறியது"
என்றும் கூறலாம். இவை எல்லாம் தனிப்பட்டவர்களின் கூற்று. அவை சட்டம்
அல்ல. 10 மாணவர்களுக்கும் மேலான மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகள்
நிலைநிறுத்தப்பட வேண்டும்.
10க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் சிறிய" பள்ளிகள்
அல்ல. சட்டப்படி அவை பள்ளிகள் அல்ல. ஆக, இவ்வாறான பள்ளிகள்"
மூடப்படாமல், அவற்றின் உரிமங்கள் பறிபோகாமல் இருக்க, நாம் என்ன
செய்ய வேண்டும்? அப்பள்ளிகள்" மூடப்படக்கூடாது. தேவைப்படும் வேறு
இடங்களுக்கு மாற்றலாம். மசீச அவ்வாறான 17 பள்ளிகளை வேறு இடங்களுக்கு
மாற்றியிருக்கிறது. 60 பள்ளிக்கூடங்கள் மாற்றப்படவிருக்கின்றன.
குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் தரக் குறைவாகவும் அதிகமான
மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் தரம் உயர்ந்ததாகவும் இருக்கும், இருக்க
வேண்டும், என்பது சட்டமன்று. அது ஒரு கருத்து. அக்கருத்து மாற
வேண்டும்.
அதிகமான மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் அனைத்து வசதிகளையும்
பெற்று இருக்கவில்லை. அப்பள்ளிகளின் மாணவர்கள் அனைவரும் கல்வி
கற்பதில் முதல் தரத்தில் இருக்கிறார்கள் என்ற நிலை இல்லை.
குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளைக் கூட்டுப்
பள்ளிகளாக்கினால்தான் மாணவர்கள் சிறந்த கல்வி பெற முடியும் என்பது
நிருபிக்கப்படவில்லை.
523 தமிழ்ப்பள்ளிகளும் தொடர்ந்து இருக்க வேண்டும். அவற்றின் தரம்
உயர வேண்டும். மாணவர்கள் வளம் பெற வேண்டும்.
|