வீர வரலாறு படைத்த
மலேயா கம்யூனிஸ்டுத் தலைவர் எஸ்.
எ. கணபதி
“தோழர்களே, விடுதலைப் போராட்டத்தில் பங்கு
பெறுங்கள் ஏகாதிபத்தியத்தை விரட்டி அடியுங்கள்!' என்று பிரிட்டிஷாரின்
அதிகாரிகளால் தூக்கிலிடப்படுவதற்கு முந்திய நாள் வீரத் தியாகியும்,
மாபெரும் மலேயா நாட்டு கம்யூனிஸ்டு தலைவரும், மலாயா தொழிலாளரின் ஒப்பற்ற
ஆசானும், பிரிடிஷ் ஏகாதி பத்தியத்தையும், ஜப்பானிய ஏகாதிபத்தியத்தையும்,
பின்னர் மீண்டும் பிரிடிஷ் ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து சீனக்
கம்யூனிஸ்டுகள், மலேயா கம்யூனிஸ்டுகளுடனும், சக தமிழ் கம்யூனிஸ்டுகளுடனும்
இணைந்து நின்று தலைமை வகித்து வீர தீரமாகச் சமர்புரிந்த செம்மலும்,
நேத்தாஜி சுபாஷ் சந்திர போசுடன் ஒரு நாள் முழுக்க பேச்சு நடத்தி இந்திய
தேசிய ரரணுவத்தில் இணைந்து, பின்னர் பழம் பெருச்சாளி இந்திய அதிகாரிகளால்
துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டு நேதாஜி தலையிட்டு, விடுவித்து
பாராட்டப்பட்டவரும் ஆன தோழர் மலேயா கணபதி மக்களுக்கு அறை கூவல்
விடுத்தார்.
தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கும், பேட்டைக்கும் இடையில்
உள்ள தம்பிக்கோட்டைதான் வீரத் தியாகி எஸ். எ. கணபதியின் சொந்த ஊர். இப்போது
அவர் நினைவாக ஒரு கல்தூண் அங்கு உள்ளது, மலேயா கணபதியை எஸ். எ. கணபதி
என்றும் அழைப்பார்கள். சிறப்பாக அவரை ‘பதுமை பாரதி கணபதி' என்றும்
அழைப்பார்கள், அவர் குடும்பத்தினர் ‘பாய் கட்டி கப்பல்' அதாவது பாய்மரக்
கப்பல் காலத்தில் 9 மாதம் பயணம் செய்து மலேயா வந்தவர்கள். அவரின்
மாமனார்தான் அவரை வளர்த்து படிக்க வைத்து வியாபாரத்தில் ஈடுபடுத்தினார்.
அவர் இடியப்பம் தொழில் செய்தார். பின்னர் தொலைத்தொடர்பு நிலையத்தில் வேலை
பார்த்தார். இக்கால கட்டத்தில்தான் அவருக்கு தொழிலா ளர்களுடனும்,
தொழிற்சங்க அமைப்புகளுடனும் தொடர்பு ஏற்பட்டது.
மலேயாவில் உள்ள தமிழர்கள் “ஓராங்
கிள்ளிங்' என்று அழைக்கப்பட்டனர். இச்சொல்லின் பொருள் “திருடன்",
“கொலைகாரன்", “தாழ்ந்தவன்" என்பதாகும். இதை எதிர்த்து பல ஆண்டுகள்
போராட்டம் நடைபெற்றது. இந்த இயக்கத்தின் இதயமாக தோழர் கணபதி
விளக்கினார்.
1930ஆம் ஆண்டுகளில் மைதானம்
அளவிற்கு பெரியதான சிங்கப்பூரிலுள்ள கிருஷ்ணன் கோவில் சந்து என்றும் லோரோங்
கிருஷ்ணன் என்றும் மலாய் மொழியில் அழைக்கப் பட்ட இடம் தான் ஆந்திராவின்
தெலுங்கா னாவைப் போன்று புரட்சியாளர் தங்கிருந்து போராடிய இடம்.
தோழர் கணபதி பகத்சிங் உடற்பயிற்சி
கழகத்தைத் துவக்கினார். அங்கு சகல உடற்பயிற்சியும் கற்றுத் தரப்பட்டது.
அவரே சகல பயிற்சிகளையும் கற்றிருந்தார். திரு. வி. க. வாசக சாலை இரவு பகலாக
இயங்கி தமிழ், ஆங்கில புத்தகங்களையும் பத்திரிகைகளையும் வினியோகித்து
வந்தது. பிரசார கலை, பிரசாரம் செய்யும் முறைகளையும், பேச்சுவன்மைகளையும்
வளர்த்தது அது. நேரு பூப்பந்து சங்கம் சகல விளையாட்டுகளையும் நடத்திற்று.
மலேயா தமிழர்கள், மலேயா இந்தியா காங்கிரஸ், பகுத்தறிவு இயக்கம், தனித்தமிழ்
இயக்கம், மலேயா கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறைமுகமாக இயக்கப்படும் தொழிற்
சங்க இயக்கம், ரப்பர் தோட்டத் தொழிலாளர் இயக்கம் ஆகியவற்றின் மூலம் அரசியலை
அடைந்தனர்.
தமிழர் சீர்திருத்த சங்கத்தின்
பத்திரிகையான ‘தமிழ் முரசு' வளர்ச்சியில் கணபதி பங்கு கொண்டார். குடியரசு
பதிப்பகத்தாரின் நூல்களில் சிங்காரவேலர் எழுதிய சமதர்மப் புத்தகங்களைப்
படித்ததன் காரணமாக அவருக்கு மார்க்சிய கண்ணோட்டம் ஏற்பட்டது. மலேயாவில் அதே
சமயத்தில் மலேய கம்யூனிஸ்டு கட்சி தொடங்கியது. அதே சமயம் தமிழ் நாடு
கம்யூனிஸ்டுகளின் ‘ஜனசக்தி' பத்திரிகை மற்றும் வெளியீடுகளும், தோழர்
கணபதியைப் பக்குவப்படுத்தின. பகத்சிங்கின் ‘இந்துஸ்தான் சோஷலிஸ்டு
ரிபப்ளிகன் ஆர்மி'யின் தூர கிழக்கு கிளையின் செயல்பாடுகள் கணபதியை
கம்யூனிஸ்டு கணபதியாக ஆக்கிற்று. கம்யூனிஸ்டு கட்சியின் அமைப்பு, திட்டம்,
போராட்டம் மூலம்தான் சகல பிரச்சனைகளுக்கும் முடிவு காண முடியும் என்று
உணர்ந்து வர்க்கப் போராட்டங்களையும் அமைப்புகளையும் உருவாக்குவதில் அவர்
முனைந்தார்.
இந்தியர்கள் மத்தியில் 9
கம்யூனிஸ்டு குழுக்கள் இருந்து வந்தன. கம்யூனிஸ்டு குழுக்களில் பெரிய
குழுக்களான கணபதியின் குழுவும் குருதேவின் குழுவும் முதலில் இணைந்தன.
பின்னர் இதர எல்லாக் குழுக்களும் ஒன்றிணைந்தன. இதற்கு இடையே கணபதி,
குருதேவனுக்கு அகில மலேயா கம்யூனிஸ்டு கட்சியின் சீனப் பகுதியுடனும்,
தமிழ்நாட்டு கம்யூனிஸ்டு கட்சியுடனும் தொடர்பு இருந்தது. இதனால் மலேயா
கம்யூனிஸ்டுக் கட்சிக்கு இந்திய, சீனக் கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆலோசனை
கிடைத்தது.
1932ல் ஆறுமுகம் குழு, கணபதி குழு,
குருதேவ் குழு, இந்துஸ்தான் ரிபப்ளிகன் ஆர்மி ஆகியவை ஒன்றிணைந்து சட்ட
விரோதமாக்கப்பட்டிருந்த மேதினத்தை கொண்டாடின. இரவோடு இரவாக முடிந்த
மட்டிலும் செங்கோடிகள் உயர்த்தப்பட்டன. பெரிய அதிகாரியின் வீட்டிற்கு
முன்பே செங்கோடி ஏற்றப்பட்டது.
1938ல் கோலாலம்பூர் பகுதிகளில்
ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள், நிலக்கரி, ஈயச்சுரங்கப் போராட்டங்களும்,
கம்யூனிஸ்ட் அமைப்பின் நடைமுறைகளே ஆகும். தோழர் கணபதி மற்றும் வீரசேனன்,
குருதேவ், வீரபாகு மற்றும் பலர் கலந்துதான் போராட்டம் நடந்தது. ஆர். எச்.
நாதன் நாடு கடத்தப்பட்ட பின்னரும் போராட்டம் தொடர்ந்து நடந்தது.
1936ல் சிங்கபூரில் வண்டிகள்
ஓடவில்லை. தந்தி அலுவலகம் இயங்கவில்லை. மின்சாரம், போக்குவரத்து, நகர
சுத்திகரிப்பு வேலைகள் 45 நாட்கள் நின்றுவிட்டன. இவற்றில் எல்லாம் தோழர்
கணபதி முன்னணியில் நின்றார். இதில் சகல மக்களும் பங்காற்றினர். மறியல்
வெற்றி பெற்றது.
இந்திய இளைஞர் கழகம் பெரும்பாலும்
காங்கிரசின் தலைமையில் இயங்கியது. ஆனாலும் தோழர் கணபதியின் ஆதரவாளர்கள்
அங்கும் இருந்தனர். அவர்கள் ஒரு ‘கோர்' அமைத்து தொண்டர்படை
அமைத்திருந்தனர். இத்தொண்டர் படையும் கணபதி தலைமையிலான இளைஞர் சங்கத்
தொண்டர் படையும் இணைந்து மக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்தனர். மலேயாவில்
தமிழ் தேசிய இனம் 3வது சிறுபான்மை இனம். தோழர்-கணபதியும் அவரது தோழர்களும்
தமிழ் மக்களை மார்க்சிய லெனினிய பாதையில் அழைத்துச் செல்வதற்குப் பெரிதும்
பாடுபட்டனர்.
1936-38ல் மலேஷியாவில் குறிப்பாக
சிங்கப்பூரில் தீண்டாமையை எதிர்த்து வீரமிக்க போராட்டம் நடந்தது.
தாழ்த்தப்பட்டவர்கள் காப்பிக்கடையில் முற்பட்ட வகுப்பினருக்கு சமமாக
உட்கார்ந்து காப்பி சாப்பிட அனுமதிக்கப்படவில்லை. அப்படிக் குடிப்பதாய்
இருந்தால் பால்டின்களில் காப்பி வாங்கிக் கொண்டு சென்று, கடைக்கு வெளியில்
குடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். இதை ஒட்டி அடிக்கடி
மோதல்கள் ஏற்பட்டு வந்தன.
இதைச் சரியான முடிவுக்குக் கொண்டு
வர தோழர் கணபதி பெரிதும் செயல்பட்டார். அதற்கு துணையாக மாயூரம்
முனுசாமி, மாங்குடி ராமு, கறுமபக்குடி வைத்தியலிங்கம் பாடுப்பட்டனர். தோழர்
கணபதி ஒரு திட்டமிட்ட போராட்டத்தை துவக்கினார். இதற்கு சீன தோழர்களும்
உதவினர். நவீன ஆயுதங்களுடன் போர்ப்படைகள் போல் தீண்டாமை ஒழிப்பு போராட்டம்
தொடங்கியது. வைதீகக் கும்பலும் எதிர்த்தது. எனினும் சிறுகச் சிறுக தீண்டாமை
எதிர்ப்புக் குழுவின் கை ஓங்கியது. இறுதியில் தீண்டாமை
ஒழிந்தது.
2வது உலகப் போர் வெடித்தபின் தோழர்
கணபதியும் அவரது தோழர்களும் நகரத்தை விட்டு கிராமப் புறத்திற்கு ஓடிய
மக்களுக்கும், ஜப்பானிய குண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்
பாதுகாப்புக் குழிகள் வெட்டிக் கொடுப்பது, அடிபட்டவர்களுக்கு முதலுதவி
செய்வது, மக்களுக்கு விமானத் தாக்குதல் பற்றி எச்சரிக்கை செய்வது,
யுத்தத்தைப் பயன்படுத்தி ரவுடிகள் செய்யும் தொல்லைகளிலிருந்து மக்களைக்
காப்பாற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். ஐ.பி.டி. என்ற இந்தியர் முதல்
உதவிப்படை மூலம்தான் இது செய்யப்பட்டது.
ஜப்பானில் ராஷ்பிஹாரி கோஷின்
தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்திய லீகிற்கு மலேயாவிலும் கிளை இருந்தது.
ஜப்பானியர் உதவியுடன் இந்திய சுதந்திரப் போராட்டத்தை துவங்க ஆரம்பிக்கப்பட
வேண்டும் என்று கருதி நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூர், மலேயா
வந்தார். கணபதி மற்றும் அவருடைய தோழர்கள் உதவி தேவை என்று கருதி கணபதி,
வீரசேனன், வீரபாகு, வீரவர்மன், குருதேவன், எம்.ஆர்.கோபால், கெ.எஸ்.தாதன்,
சோமசேகர் போன்ற கம்யூனிஸ்டுகளையும் காங்கிரஸ் கட்சியில் இருந்த
சேதுப்பிள்ளை என்பவரையும் சந்தித்து ஒரு நாள் முழுவதும் விவாதங்கள்
நடத்தினார். “நீங்கள் கம்யூனிஸ்டுகள் என்று எனக்குத் தெரியும் ஆனால் இந்திய
சுதந்திரப் போராட்டதிற்கு உங்கள் உதவி தேவை' என்று கேட்டுக்
கொண்டார்.
கணபதியும் மற்றவர்களும் “நாங்கள்
கம்யூனிஸ்டுகள்தான் ஆனால் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு நாங்கள்
எப்போதும் பின் வாங்கியதில்லை' என்று பதில் கூறினார்கள். நேத்தாஜி தோழர்
கணபதியை முகமலர்ச்சியுடன் பாராட்டினார்.
அதன்பின் ராணுவ ஆசிரியப் பயிற்சிப்
பள்ளியில் கணபதியின் தோழர்கள் மட்டும் 180 பேர் (பெண்களும் கலந்து
கொண்டனர்) மலேயாவின் எல்லைப் பகுதிகளுக்குச் சென்று இந்திய சுதந்திர
ராணுவத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார். இம்பாலா முனையை இ. தே. ராணுவம்
தொட்டு நின்ற போது பிரிட்டிஷ் ராணுவத் திலிருந்து வந்த பழைய
படைப்பிரிவுக்கும் கணபதியின் தலைமையில் நின்ற புதிய படைப்பிரிவுக்கும்
இடையே ஜப்பானியக் கொடியை இந்திய மண்ணில் ஏற்றுவது சம்பந்தமாக முரண்பாடு
ஏற்பட்டது. தோழர் கணபதி மற்றும் 120 தோழர்கள் மீது துரோகிகள் குற்றம்
சாட்டப்பட்டது. ஆனால், நேத்தாஜி தலையிட்டு அவர் மீதும் இதரர் மீதும் உள்ள
குற்றச்சாட்டை திரும்பப் பெறும் படி உத்தரவிட்டதுடன் கணபதியைப் பாராட்
டவும் செய்தார்.
மலேயாவை கைப்பற்றிய ஜப்பானிய அரசு
பாசிச அடக்கு முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. அடக்குமுறைக்குப் பயந்து பலர்
வாயடைத்து நிற்கவில்லை. மலேயாவில் ஜப்பானிய எதிர்ப்புப்படை இயக்கத்தை
தோற்றுவித்தது. மலேயா கம்யூனிஸ்டுக் கட்சி, போர் முடிந்து மீண்டும்
பிரிட்டிஷ் ஆட்சி மலேயாவில் ஏற்பட்ட போது கணபதி தலைமையிலான கம்யூனிஸ்டுகள்
பிரிட்டிஷ் எதிர்ப்புப் படையாக மாறினார்கள்.
கம்யூனிஸ்டு கட்சி புனரமைப்பு
செய்யப்பட்டது. மலாய, சீன, இந்திய தேசிய இனங்களைச் சேர்ந்த விரிவான
கம்யூனிஸ்டு கட்சி அமைக்கப்பட்டது. மத்திய கம்யூனிஸ்டு கட்சி என்பது மூன்று
தேசிய இனங்களும், தனித்தனியே மூன்று மத்தியக் கமிட்டியும் கொண்டதாக
இருந்தது. இந்திய மத்தியக் கமிட்டியில் தோழர் ஆர். பாலன் செயலாளர், எஸ். எ.
கணபதி தொழிலாளர் பகுதி, வீரவர்மன் பிரசாரப்பகுதி மற்றும் கோவி, பாரதி
மோகன், ஆர். முருகையன், எம். ஆர். குருதேவன், சி.வி. குப்புசாமி ஆகியோரும்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அக்கால கட்டத்தில் கிராமப்புறத்தில்
கம்யூனிஸ்டு ஆட்சி நகர் புறங்களில் பிரிட்டிஷ் ஆட்சி ஆக இரட்டை ஆட்சி
நடைப்பெற்றது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி தோழர் கணபதி தனது பழைய
தோழர்களையும், பழைய இ.தே. ராணுவ வீரர்களையும் ஒன்றிணைத்து, அரசுக்கும்
தோட்ட தொழிலாளர்களுக்கும், தோட்ட முதலாளிகளுக்கும் உள்ள முரண்பாட்டை
கூர்மையடையச் செய்து, போராட்டங்களை உயர்த்தி சங்கங்களை அரசியல் ரீதியில்
வளர்த்தார். அவர் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே, மலேயா முழுவதும் தொழிற்சங்கம், மற்றும்
கம்யூனிஸ்டு கட்சியின் பொறுப்பு மிக்க தோழர்களைக் கொண்டதாயிருந்ததால்
சுலபமாக அகில மலேயா தொழிற்சங்க சம்மேளனத்தை அவர் உருவாக்க
முடிந்தது.
1943 ஆண்டுகளில் பத்து ஆராஸ் (நிலக்கரி சுரங்கம்) போராட்டம்
மலேயா அரசையே ஓர் ஆட்டம் காணச் செய்தது. 14,000 தொழிலாளர்களின் 45 நாள்
வேலை நிறுத்தம் நடந்தது. மக்களுடன் காவல்துறையினர் மோதினார்கள்.
கம்யூனிஸ்டு கொரில்லா படை நவீன ஆயுதங்களைக் கொண்டிருந்தது. அதுவும் மோதலில்
இறங்கிற்று. வேலை நிறுத்தம் போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றது. இந்த
வெற்றியில் தோழர் கணபதியின் பங்கு சிறப்பானதாக இருந்தது. மாதர் மன்றங்களின்
பணியிலும் அவர் முக்கிய பங்கு எடுத்தார்.
மலேயாவில் பள்ளிக்கூடங்கள்
தொழிற்சங்கங்களின் பொறுப்பில் இருந்தன. எல்லா பள்ளிகளின் பெயர்களில்
மாற்றங்கள் செய்ததோடு அவற்றின் செயல்பாட்டிலும் முக்கிய பங்காற்றினார்
அவர். மறைமலை அடிகள் பாடசாலை, ஜீவா பாடசாலை, ராமமூர்த்தி பாடசாலை, பகத்சிங்
பாடசாலை, பெரியார் பாடசாலை போன்ற பெயர்கள் வைக்கப்பட்டன. மாணவர்கள்,
ஆசிரியர்கள், கர்மவீரர்களாக, கடமையுணர்வு கொண்டவர்களாக விளங்கினர். தமிழ்
வளர்ச்சிக் கழகம் அமைக்கப்பட்டு நன்றாக செயல்பட்டு வந்தது.
மக்கள் ஜனநாயக கழகங்கள், ஜனநாயக
இளைஞர் மன்றங்கள், பகுதி சங்கங்கள் மற்றும் பிற எல்லா மக்கள்
அமைப்புகளையும் உருவாக்கி எல்லா அரசியல் கட்சிகளும் மதிக்கும் ஒரு மக்கள்
தலைவனாக தியாகி கணபதி விளங்கினார்.
இந்த நிலைமையில் பிரிட்டிஷ் அரசு
நில அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பழைய கால அடிமைத் தனத்திற்கும் பழையபடி
நசுக்கவும், சுரண்டவும் ஆன ஒரு திட்டமே அது. கம்யூனிஸ்டுகளும்,
தொழிற்சங்கங்களும் முற்போக்காளர்களும் இதை ஏற்கவில்லை. மலேயா தேசிய இன
இயக்கங்கள் மூன்றும் ஒன்று சேர்ந்து, இதர தனித் தனியான அமைப்புகளும்
ஒன்றுபட்டு போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஐக்கிய முன்னணியை தோழர் பான்
செல்லாக் தலைமையில் அமைத்தனர். தோழர் கணபதியும் இதில் முன்னணி பாத்திரம்
வகித்தார். சிங்கப்பூர் கடற்கரையோரத்தில் ஒரு பெரிய பேரணியை நடத்தினார்.
பேரணி நடத்துவது தமக்கு பெரிய ஆபத்து என்று உணர்ந்து அரசு அதை நடத்தக்
கூடாது என்று தடுத்தது. அரசு மேலும் மேலும் ராணுவ படைகளைக் கொண்டு வந்து
குவித்தது. மக்களுக்கு அதிக சேதம் ஏற்படும் என்று கருதி பேரணி அகில மலேயா
முழுவதும் ‘ஹர்த்தால்' நடக்கும் என்று அறிவித்து விட்டு கலைந்து சென்றது.
அறிவித்தபடி ஹர்த்தால் நடந்தது. ஹர்த்தால் வெற்றி பெற்றதை அடுத்து அரசு
அவசர கால சட்டத்தை கொண்டு வர முடிவு செய்தது. இந்த நிலைமையில் காடு, மலை
கிராமங்களிலிருந்து கொரில்லாப் போர் நடத்துவது என்று கணபதி உள்ளிட்டு சகல
தலைவர்களும் உடனடியாக தலைமறைவாகி விட்டனர். அவசர கால சட்டத்தை அரசு கொண்டு
வந்து மலேய முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்களை கைது செய்தது; சுட்டுத்
தள்ளியது; கொடுமைப் படுத்தியது; சித்திரவதை செய்தது.
அரசு நடவடிக்கைகளுக்கு பதிலடியாக
சிறிய, பெரிய போராட்டங்கள், கொரில்லாப் போர் நடக்க ஆரம்பித்தது. நிலைமையை
சமாளிக்க கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய அரசு தளபதியான ஹென்ரி பால்கனி
மலேயா வந்தார். முன்னும் பின்னும் 20 வண்டிகள் வந்த போதிலும், மக்கள் படை
அவரைச் சுட்டுக் கொன்றது. பிரிட்டிஷ் அரசு வெளிநாடுகளிலிருந்து
கூர்க்காப்படை, ஆப்பிரிக்க மலைவாசிப் படைகளைக் கொண்டு வந்து
குவித்தது.
இந்த சூழ்நிலையில் தோழர் கணபதி
முழுவதுமாக ராணுவப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர் தலைமையில் வீரவர்மன்,
வீரசேனன் போன்ற தளபதிகள் செயல்பட்டனர். கொரில்லா நடவடிக்கைகள் நீண்ட
வீச்சைப் பெற்றது. கணபதியின் பெயர் மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும்
உணர்வைத் தட்டியெழுப்பும் பெயராக இருந்தது. எதிரிகளுக்கு அவர் சிம்ம
சொப்பனமாகத் திகழ்ந்தார். எனவே அவரை கைது செய்ய அரசு கடும் முயற்சி
செய்தது.
இத்தகைய சூழ்நிலையில் தான்
எதிரிகளும் எதிரிப்படைகளும் அவரையும் அவரது படைகளையும் திடீரென்று சுற்றி
வளைத்துக் கொண்டு தோழர் கணபதியைக் கைது செய்தனர். தமது நேரடி
கட்டுப்பாட்டுக்குள் இருந்த மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். கணபதி கைது
செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரப்பர் கிடங்குகள் தீப்பற்றி எரிந்தன. வெள்ளைக்
வண்டி வழிமறித்து தாக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டங்கள் எங்கும் நடைபெற்றன.
தொழிலாளிகள் வேலைக்குச் செல்ல மறுத்தனர்; வீரமிக்க இளைஞர்கள் தலைவனை
விடுதலை செய்ய எந்த தியாகமும் செய்யத் தயாராய் இருந்தனர்.விடுதலைக்
கிளர்ச்சி அதிகரித்தது.
கணபதி ஒரு தேசத் துரோகி என்றும்
கணபதிக்கு ஆதரவாக எதைச் செய்தாலும் தேசத் துரோகச் செயல் என்றும் அரசு
அறிவித்தது; கைது செய்யப்படுவார்கள் என்று பிரகடனம் செய்தது. போலியாக ஒரு
விசாரணை நடத்தி கணபதி ஆயுதம் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டி அவருக்கு
தூக்கு தண்டனை வகித்தது அரசு.
எனினும் அவரை விடுதலை செய்ய
வேண்டும் என்று மக்கள் ஒருமுகமாக குரல் எழுப்பினர். தொழிற்சங்கங்கள்
ஆர்ப்பாட்டம் செய்தன. அரசியல் கட்சிகள் அனைத்தும் வேண்டுகோள் விடுத்தன.
மூன்று தேசிய இனக் கட்சிகளும் கோரின. இந்தியாவின் பிரதிநிதி எ. வி. திவி
வேண்டுகோள் விடுத்தார். உலகத் தொழிற்சங்க சம்மேளனம், உலகெங்கிலும் உள்ள
ஜனநாயக சக்திகள் கோரின. சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி மலேயா அரசைக்
கண்டித்தது.
உலக ரீதியாகவும், மலேயாவுக்குள்ளும்
ஏற்பட்டிருந்த எதிர்ப்பை சமாளிக்க ஒரே வழி என்று மலேயா அரசு கருதி இரண்டு
நாட்களுக்கு முன்பு தூக்குதண்டனை நிறைவேற்றப்படும் என்று திடீரென்று
அறிவித்து, விசேஷ பாதுகாப்பு போட்டு தண்டனையை அவசர அவசரமாக நிறைவேற்றியது.
முந்திய நாள் இரவு அவர் சக பக்கத்து
அறைத் தோழர்களுக்கு கேட்கும்படியாக உரத்த குரலில் “தோழர்களே, நீங்கள்
வெளியில் போனால் விடுதலைப் போராட்டத்தை தொடருங்கள்" என்று வேண்டுகோள்
விடுத்தார். இறுதி ஆசை என்ன என்றூ அவரிடம் கேட்ட போது “மலேயா சுதந்திரம்"
என்று ஆர்ப்பரித்தார். இரவு பூராவும் தோழர்களுக்கு கடிதம் எழுதினார்.
ஆனால், அவற்றை அரசு தோழர்களிடம் சேர்ப்பிக்கவில்லை.
மக்கள் தலைவனும்,
ஐ.எம்.எ. ஸ்தாபகர்களில் ஒருவரும், மலேயா கம்யூனிஸ்டுக் கட்சி அரசியல் குழு
உறுப்பினரும், ராணுவத் தளபதியும், மிகப்பெரிய தொழிற்சங்க தலைவனும், தலை
சிறந்த கம்யூனிஸ்டும் ஆன தோழர் கணபதி வீரனாக இருந்தார்; வீரனாக போராடினார்;
வீரனாக தூக்குக் கயிற்றை முத்தமிட்டார்.