|
கலிங்கம் - கில்லிங் வரலாற்றுத் தேடலில் சில
உண்மைகள்
தமிழியல் ஆய்வாளர் அருண், கிள்ளான்
தமிழர்கள் ஜாவா நாட்டினைச் சாவகம்
என்றழைக்கின்றனர். கெடா என்னும் மாநிலத்தினைக் கடாரம் என்கின்றனர்.
நிப்போன் என்ற நாட்டினை உலகில் பலர் ஜப்பான் நாடு என்றே அழைக்கின்றனர்.
மொழியியலில் பெயர் சொற்களைத் திரித்துச் சொல்வது மிக இயல்பானது.
கலிங்கம் என்னும் இடத்தினை
மலாய்க்காரர்கள் ‘க்காலிங்கா' (Kalingga) என்றழைத்தனர். கலிங்கம் என்னும்
நிலப்பரப்பு இந்தியக் கண்டத்தில் பெரு நிலமாக இருந்துள்ளது. இங்கிருந்து
வந்தவர்களைக் கலிங்கர் என்றழைத்திடல் வேண்டும். சொல் திரிபால் கலிங்கர்
என்பவர்களை ‘கில்லிங்' (Keling) என மாற்றி அழைத்தனர். வரலாற்று அடிப்படை
யில் இச்சொல்லிற்கான தொடக்கம் கலிங்கம் என்னும் நிலப்பரப்பினை
அடிப்படையாகக் கொண்டே வழங்கப்பட்டுள்ளது.
அன்றைய இந்தியாவில் கலிங்கம்
என்னும் நிலபரப்பு இன்றைய ஒரிசா மாநிலத்தின் ஒரு பகுதியினையும் ஆந்திர
மண்ணின் ஒரு பகுதியினையும் கொண்டிருந்தது. இந் நிலப்பரப் பிலிருந்து வணிக
நோக்கிற்காக மலாயா வந்தவர்கள். இவர்களே மலாய்க்காரர்களுக்குக் ‘கைலி'
என்னும் உடையினை அறிமுகம் செய்துள்ளனர்.பாளையக் காட்டிலிருந்து கொண்டு
வரப்பட்ட பருத்தித் துணியைக் கொண்டு ‘கைலி' வடிவமைக்கப்பட்டது. இன்றளவும்
மலாய்மொழியில் இந்த ஆடையை ‘பெலிக்காட்' (Kain pelikat) என்றே
அழைக்கின்றனர். இதன் தொடர் பாகவே ‘கில்லிங் பெலிகாட்' (Keling Pelikat)
என்னும் சொல்லாடல் வழங்கப்படுகின்றது. இதுவே இச்சொல் அகச்சான்றாகவும்
புறச்சான்றாகவும் இருக்கின்றது.
மலாய்க்காரர்களின் ஆதி இனவரலாற்று
நூலான ‘மலாய் வரலாற்று' (Sejarah Melayu) நூலில் ‘கில்லிங்' என்னும்
இச்சொல் மிகப் பரவலாகக் காணப்படுகின்றது. பெனுவா கில்லிங் - Benua Keling
(கலிங்கர் கண்டம்), இராசா கில்லிங் – Raja Keling (கலிங்க மன்னன்), அனாக்
கில்லிங் – Anak Keling (கலிங்க மக்கள்), பெடாகாங் கில்லிங் – Pedagang
Keling (கலிங்க வணிகர்), Saudagar Keling (சௌடாகார் கில்லிங்) என்னும்
சொல்லாடல்கள் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அடிப்படையில் இச் சொல்லாடல்கள்
யாவும் குறிப்பிட்ட ஓர் இனத்தினையும், அவ்வினத்தார் வாழ்ந்த இடத்தினையும்
குறிப்பதாகவே இருந்துள்ளது.
அக்காலத்தில் மலாயா வந்த
போர்த்துகீசியர்கள் தமிழர்களையும் தமிழ் வணிகர்கலையும் ‘க்கிலிஞ்ஞா'
(Quelin) என்றே அழைத்துள்ளனர்.
சீனர்கள் இன்றளவும் தமிழர்களை
‘கெர்-லாய்-ங்ஙா' (Ker-lay-nga) என்றுதான் விளிக்கின்றனர். தமிழர்களின்
வரலாற்றினை ஓரளவு அறிந்த முதிய சீனர்கள் தமிழர்களை ‘ச்சூ-யென்' (Chu-li-en)
என்றழைக்கின்றனர்.
மலாய்க்காரர்கள் தமிழர்களை
‘கில்லிங்' (Keling) எனவும் ‘ச்சுழியா' (Chulia) என்றே அழைக்கின்றனர்.
வரலாற்று அறிவும் உணர்வும் கொண்டவர்களே ‘ச்சூழியா' என அழைக்கின்றனர்.
இன்னபிற மலாய்க்காரர் யாவரும் ‘கில்லிங்' என்னும் சொல்லாடலையே
பயன்படுத்துகின்றனர்.
அக்காலத்தில் இந்திய மக்களில்,
கடலில் பயணம் மேற்கொண்ட வணிகம் செய்தவர்களில் தமிழர்களே அதிகமானோர். இன்று
வழக்கத்தில் சொல்லப்படும் ‘கில்லிங் பெலிகாட்' (Keling Pelikat) என்னும்
சொல் இதற்கு ஏதுவான சான்றாக அமைந்துள்ளது. பாளையக்காடு என்னும் சொல்லே
பெலிகாட் என்று வழங்கப்படுகின்றது. தமிழ்நாடு - தமிழினம் பற்றிய மலாய்
இனத்தவரின் புரிதல் தெளிவாக அறியப்படவில்லை. அக்காலத்தில் கீழ்க்கரை ஆசிய
நாடுகளுக்கு வணிகம் மேற்கொள்ள வந்தவர்கள் கலிங்கர் என்றும் இவர்களின் நாடு
கலிங்கநாடு என்றளவில் மலாய்க்காரர்களின் புரிதலாக இருந்துள்ளது. இதில்
தவறேதுமிருக்க வாய்ப்பில்லை. மக்களின் வாழ்வியல் நிலைப்பாடு, பிற
இனத்தாருடன் அவர்களின் தொடர்புநிலை என்னும் அளவீட்டில் இப் புரிதல்
ஏற்புடையதாக இருந்துள்ளது. ஆகவே, கலிங்கம் - கலிங்கர் என்னும் சொற்கள்
தமிழர்களையே குறிப்பதாகவே இருந்துள்ளன. பின்னாளில் இச்சொல் மருவி
‘கில்லிங்’ என வழங்கப்பட்டது.
கலிங்கம் என்னும் சொல்லாடலுக்கு
செவிவழிச் செய்திகள் சில உள. அவற்றில் இரண்டு செய்திகளைக்
காண்போம்.

கலிங்கம் என்னும் சொல்லிற்குப்
போர்வை, சீலை, துணி என்னும் பொருள்கள் உள்ளன. அக்காலத்தில் வணிகத்திற்காக
மலாயா வந்த தமிழ் வணிகர்கள் மிக உயர்தர துணிகளையும் கொண்டு வந்துள்ளனர்.
ஆகவே, இவர்களுக்குக் கலிங்கம் விற்பவர்கள் – கலிங்கர் என்னும் பெயர்
ஏற்பட்டது.
அடுத்து, தமிழகத்திலிருந்து மலாயா
வந்த தமிழ்ப்பெண்டீர் கால்களில் கொலுசுகள் அணிந்திருந்தனர். இப் பெண்டீர்
நடக்கும்பொழுது ‘க்லிங்...க்லிங்...க்லிங்' என்னும் ஒலி எழும்பியுள்ளது.
இவ்வொலியினைக் கொண்டே ‘கில்லிங்’ என்னும் சொல்லாடல் பிறந்துள்ளதாகக்
கூறப்படுகின்றது. இவ்விரண்டு செய்திகளுக்கும் அகச்சான்றோ புறச்சான்றோ
ஏதுமில்லை. இது முழுக்க முழுக்க செவிவழிச்செய்தியே. இருப்பினும்,
இச்செய்தியில் கருத்துச்சாரம் உண்டென்பதை உணர்ந்திடல் வேண்டும்.
நிலை இவ்வாறிருப்பினும், இங்கு
வணிகத்திற்காக வந்தவர்கள் தமிழர்களே! மொழியால் தமிழர்கள், நாட்டால்
தமிழர்கள். பின் ஏன் இவர்களுக்குக் கலிங்கர் என்னும் அடைமொழி
ஏற்பட்டது?
இங்கு வந்த வணிகத் தமிழர்கள் தங்கள்
இனத்தினை கலிங்கர் இனம் என அடையாளப்படுத்திக் கொண்டார்களா?
தங்கள் நாடு கலிங்க நாடு எனக்கூறிக்
கொண்டார்களா?
தங்கள் மொழி கலிங்கமொழி என்னும்
பொருள்பட கருத்துரைத்துக் கொண்டார்களா?
தாங்கள் தழுவியிருக்கும் பண்பாடு
கலிங்கப்பண்பாடு எனக் கூறினார்களா?
என ஏதும் அறிந்திடுவதற்கான அடிப்படை
சான்றுகள் இல்லை. இருப்பினும் இன்றைய நாளில் மலேசியாவில் இச்சொல்லின் ஆளுமை
மிகப் பரவலாக இருக்கின்றது.
அடிப்படையில் தமிழர் என்னும் ஓர்
இனத்தாரை அடையாளப்படுத்தும் சொல்லாக இச்சொல் உருவாக்கப் பட்டுள்ளது. இதில்
கருத்துப்பிழை இல்லை. இந்நிலையில் விளிக்கும்பொழுது ஏதும் ஏளனத்தன்மையோ,
இழிவுணர்வோ இல்லை. ஆனால், பின்னாளில் மிகச் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள
சொற்கள் தமிழினத்தாரின் தன்மானத்தினை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
இந்நாட்டின் தேசியமொழியான
மலாய்மொழியினை வளர்த்தெடுக்கவும் வளப்படுத்தவும் முன்னிலை அமைப்பாக
இயங்குவது டேவான் பகாசா டான் புத்தாகா (Dewan Bahasa Dan Pustaka) என்னும் அமைப்பாகும்.
மூன்றாவது பதிப்பாக இவ்வமைப்பு
வெளியிட்டுள்ள மலாய்மொழி அகராதியில் ‘கில்லிங்' (Keling) என்னும் சொல்
பன்முகப் பொருளில் கையாளப்பட்டுள்ளது. பல சொல்லாடல்கள் உண்மைக்குப்
புறம்பாகவும் இந்திய மக்களின் மனநிலையினைப் புண்படுத்தும் வகையிலும்
அமைந்துள்ளன.
Akal keling
- அகால் கில்லிங்
(ஏமாற்றும் திறம் படைத்தவர்கள்) Golok
keling - கோலோக் கில்லிங்
(அதிகமாக உண்ணும் சோம்பேறிகள்) Kampung
keling - கம்போங் கில்லிங்
(இந்தியர் குடியிருப்பு) Lidah keling -
லீடா கில்லிங் (சுற்றி
வளைத்துப் பேசுபவர்கள்) Pusing keling -
பூசிங் கில்லிங் (சுற்றி
வளைத்துப் பேசுபவர்கள்) Tabut keling
- தாபூத் கில்லிங்
(நல்லவர் போல் நடிக்கும் தீயவர்கள்) Temberang
keling - தெம்பேராங்
கில்லிங் (எல்லாம் தெரிந்தவர்போல் பேசுபவர்கள்)
இந்நாட்டில்
இந்தியர்களை ‘கில்லிங்' என்னும் சொல்லோடு பல அடைமொழிச் சொற்கள் இணைத்து
இழிவாக அழைப்பது மிக இயல்பாக உள்ளது. ஒவ்வொரு முறையும் இச்சொல்லில்
சொல்லும்பொழுது, சொல்பவர் மிக மகிழ்வெய்துகின்றார். கேட்கப்படுபவர்
எல்லையற்ற கோபம் கொள்கின்றார். |