|
அன்று
குட்டப்பட்டார் (துரையினால்) இன்றும் குட்டப்படுகிறார்!
ஜீவி காத்தையா
குனியக்குனிய குட்டுபவனும் மடையன்,
குட்டக்குட்ட குனிபவனும் மடையன். இது தமிழ்ப் பழமொழி. கருத்துள்ள
பழமொழி.
இன்று இந்நாட்டிற்குத் தொழிலாளர்களாகக் கொண்டுவரப்பட்ட நம்மவர்களை
வெள்ளைத் துரைமார்களும் சில கருப்புத் துரைமார்களும் குட்டிக்கொண்டே
இருந்தார்கள். அச்செயல் அவர்களுக்கு மடத்தனமாக தெரியவில்லை. அது அவர்களது
அதிகாரத்தின் சின்னமாகத் தெரிந்தது.
அவ்வாறே குட்டுப்பட்டுக்
கொண்டிருந்த நம்மவர்களுக்கும் அது மடத்தனமாக தெரியவில்லை. அச்செயல்
தங்களுக்குச் சம்பளப் பிச்சை போடும் துரைமார்களின் ஆசிர்வாதமாகத்
தெரிந்தது.
ஆனால், காலப்போக்கில்
குட்டுப்பட்டுக் கொண்டிருந்த நம்மவர்கள் நிமிர்ந்தார்கள்.
குட்டிக்கொண்டிருந்த துரைமார்களை முறைத்துப் பார்த்தார்கள். அதிர்ந்துபோன
துரைமார்களின் குட்டுகின்ற கைகள் தானா கவே தாழ்ந்து விட்டன. அத்து டன்
விட்டுவிட் டனர் நம்மவர்கள். குட்டிக் கொண்டிருந்தவர்களின் கைகளை
உடைத்தெறிந்திருக்க வேண்டும் அல்லது அவர்களின் தவற்றை உணரச் செய்திருக்க
வேண்டும். அதுவும் இல்லை. இதுதான் நம்மவர்களின் நிலைமை.
எதையும் தட்டிக்கேட்க மாட்டோம்.
சற்று ஒதுங்கி பின்புறத்தில் நிற்போம். எங்களையும் எங்களது பிள்ளைகளையும்
பாருங்கள். ஏதேனும் சில உதவிகள், சில சலுகைகள் தாருங்கள். அது உங்களுக்குப்
பெரும் புண்ணியமாகும். இதுதான் நமது வாழ்க்கை முறை. அன்று மட்டும் அல்ல.
இன்றுங் கூட.
அன்றைய துரைகளைப் போல இன்றைய
துவான்கள் நம்மவர்களை குட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
நமது கோயில்கள் திடீரென்று
உடைபடுகின்றன. இது பல ஆண்டுகளாக நடக்கின்ற நல்ல காரியம், உடைப்பவர்களுக்கு.
உடைபட்ட கோயில்களின் நிர்வாகிகள் உடைபட்ட கோயில்களின் காட்சியை
பத்திரிகைகளில் தவறாமல் போட்டு நீதி கேட்கிறார்கள், ஏதோ கண்ணகி நீதி
கேட்பது போல!
உடைபட்ட கோயில்களின் நிர்வாகிகளும்
ஆளும் கட்சியினரும் இங்கும் அங்கும் ஓடுகிறார்கள். திரைமறைவில் ஏதேதோ
நடக்கின்றன. பின்னர், மாற்று இடம் கிடைத்து விட்டது என்று அறிவிப்பு
வருகிறது. இதனை ஒரு சாதனை என்று சங்கொலி ஊதுகிறார்கள்.
மூக்கு உடைந்தது உடைந்ததுதானே
என்றால், அதனாலென்ன, பிளாஸ்டிக் மூக்கு போட்டுக் கொள்ளலாமே என்கிறார்கள்.
சலுகை கேட்பவர்களுக்குக் கிடைப்பதெல்லாம் பிளாஸ்டிக்
மூக்குத்தான்!
கடைகள் உடைக்கப்படுகின்றன; வீடுகள்
உடைக்கப்படுகின்றன. நிலங்கள் காணாமற்போகின்றன. மலேசிய திரையில் மீண்டும்
அதே காட்சிகள்: பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்திடம் போகவில்லை. ஆளும்
கட்சியினரிடம் போகிறார்கள். அங்கும் இங்கும் ஓடுகிறார்கள் ஏதேதோ
நடக்கின்றன. மாற்று இடம் கிடைக்கும் என்று அறிவிப்பு வருகிறது. தொடர்ந்து
சாதனைச் சங்கின் ஒலி கேட்கிறது. மூக்கு போனது போனதுதான்.
அரசாங்க இலாகாக்களில் நம்மவர்கள்
இருந்த இடங்கள் போனதுதான். இல்லை, இல்லை. நம்மவர்களுக்கு அதிகப்படியான
வாய்ப்புகள் தர வேண்டும் என்று பல ஆண்டு களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்
என்கிறார்கள் நமது மக்களின் ஆளும் கட்சியினர். பல ஆண்டுகளாக கெஞ்சிக்
கொண்டிருப்பதும் ஒரு சாதனைதானே. ஒன்று கவனிக்க வேண்டும். எதிர்க்கட்சியினர்
அரசாங்கத்திடம் கோரிக்கைகள் சமர்ப்பிப்பது முறை. மக்களாட்சியின் மரபும்கூட.
அதென்ன, ஆளும் கட்சியினரே தனது அரசிடம் கோரிக்கைகள்
வைப்பது! கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் நம்மவர்களுக்கு
கிடைக்க வேண்டிய இடங்களுக்குப் பதிலாக நமக்கு கிடைப்பதெல் லாம் துவான்களின்
குட்டுகள்தான்.
மலேசியா ஒரு கம்யூனிஸ்ட் நாடல்ல,
ஒரு இரகசிய நாடல்ல, அனைத்து விஷயங் களையும் வெளிப்படை யாக பேசவேண்டும்
என்று பிரதமர் கூறியிருப்பதை திருவள்ளுவரின் முன் பொதுப்பணி அமைச்சர்
சுட்டிக் காட்டினார்.
உண்மைதான். மலேசியா ஒரு கம்யூனிச
நாடன்று; தொழி லாளர்களின் உழைப்பை கொள்ளையடிக்கும் முதலாளித்துவ நாடு களில்
மலேசியாவும் ஒன்று. எனினும், வெளிப் படையாக பேச வேண்டும் என்பது
பாராட்டுக்குரியது.
மலாயா பல்கலைக்கழகத்தில்
மருத்துவத்துறையில் பயில்வதற்கு நம்மவர்களுக்கு 15 இடங்கள்
கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால், துவான்கள் விட்ட குட்டுகளால் 14 இடங்கள்
காணாமல் போய் விட்டன. கிடைத்தது ஓர் இடம்தான்.
இப்பிரச்சனையை அமைச்சரவைக்குக்
கொண்டு செல்லப் போவதாகப் பொதுப்பணி அமைச்சர் கூறியிருந்தார். அமைச்சரவை
கூட்டத்திற்குப் பிறகு, பொதுப்பணி அமைச்சர் இப்பிரச்சனை பிரதமர் மகாதீரின்
கவனத்தில் இருப்பதாகவும், அவர் இதற்கு ஒரு முடிவு எடுப்பார் என்றும்
கூறியிருந்தார்.
சில காலங்களுக்குப் பிறகு பொதுப்பணி
அமைச்சர் நம்மவர்களுக்கு மாரா தொழில்நுட்ப கல்லூரிகளில் கணிசமான இடங்கள்
ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியிட்டார்.
மகிழ்ச்சிதான். சலுகை கேட்பவர்கள்
வேறு என்ன செய்ய முடியும்? கேள்வி: அந்த 14 இடங்கள் என்ன ஆயிற்று? இந்த 14
இடங்கள் பற்றி முடிவெடுக்க வேண்டிய பிரதமர் மகாதீர் அந்த குறிப்பிட்ட
அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு “துன்" ஆகி வீட்டிற்குப் போய் விட்டார்.
இந்த 14 இடங்களும் அவரோடு போய் விட்டனவா?
மலாயா ஒரு கம்யூனிஸ்ட் நாடல்ல.
இரகசிய நாடல்ல. விஷயங்களை வெளிப்படையாக பேச வேண்டும். இவை பிரதமரின் அவா.
அதனைச் சுட்டிக்காட்டியவர் பொதுப்பணி அமைச்சர். இதன் அடிப்படையில், அந்த 14
இடங்களும் என்ன ஆயின? ஏன் நம்மவர்களுக்கு கிடைக்க வேண்டியது
கொள்ளையிடப்பட்டது. அதற்கு யார் காரணம்? என்பதைப் பொதுப்பணி அமைச்சர்
வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அது அவரது கடமையும் கூட.
நாம் எல்லாரும் மலேசியர்கள். நமக்கு
எல்லா உரிமைகளும் உண்டு என்று எல்லோரும் வாயளவில் பிதற்றிக்
கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மவர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதில் பெரிய
அளவில் தில்லுமுல்லுகள் நடக்கின்றன என்று நம்மவர்கள் குசுகுசுவென பேசிக்
கொள்கின்றனர்.
பகிரங்கமாகப் பேச வேண்டிய காலம்
வந்து விட்டது. ஒரு சிலரின் பிரச்சனைகளை மட்டுமின்றி நம்மவர்களின் பொதுப்
பிரச்சனைகள் அனைத்தையும் வெளிப்படையாக பேச வேண்டும். பேசுகிறவர்களை, பேச
முன் வருபவர்களை மிரட்டி பயமுறுத்துவதற்கு பதிலாக அவர்களுக்கு ஆதரவு அளிக்க
வேண்டும்.
சமீபத்தில் பொதுப்பணி அமைச்சர்
மலேசியன் மருத்துவ மன்றத்தை பகிரங்கமாக சாடியிருக்கிறார். அம்மன்றம்
அதிகமாக இந்தியர்கள் மருத்துவர்களாவதை காண விரும்பவில்லை என்று குற்றம்
சாட்டினார். இது பாராட்டிற்குரிய செயல்.
கிரிமியா மருத்துவப்
பல்கலைக்கழகத்தின் பட்டங்களை அங்கீகரிப்பதில்லை என்ற முடிவிற்கான
காரணங்களில் ஒன்று அப்பட்டதாரிகள் ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பதில்
எதிர்நோக்கும் சிரமங்களாகும் என்று அம்மன்றம் கூறியிருக்கிறது.
இந்நாட்டிலுள்ள பல்கலைக்கழக பட்டதாரிகளின் ஆங்கிலப் புலமையை இந்த நாடே
அறிந்திருக்கும்போது, ஏன் இந்த பாகுபாடு? மற்றும் தைவான், இந்தோனேசியா
போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கும் மருத்துவர்களின் ஆங்கிலப் புலமையின்
தரம் என்ன? உள்நோக்கம் என்ன என்பதை அறிந்து வெளிப்படையாக்க
வேண்டும்.
மறுபடியும், பழைய குருடி கதவைத்
திறடி என்பது போல, இப்பிரச்சனையை பிரதமரிடம் கொண்டு செல்லப் போவதாக
கூறியிருக்கிறார் பொதுப்பணி அமைச்சர். பிரதமர் படாவியும் “துன்"
ஆகிவிட்டால் என்ன செய்வது? பழக்கம் யாரை விட்டது.
பழக்கம் பொதுப்பணி அமைச்சரையும்
விடவில்லை என்பதை அவர் விடுத்த கோரிக்கையிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் 700 மருத்துவ மாணவர்களுக்கு இடங்கள்
இருக்கின்றன. அவற்றில் 60லிருந்து 70 இடங்களை இந்தியர்களுக்கு
கொடுக்கப்பட்டிருந்தால் நான் இவ்வளவு பெரிய சத்தம் போட்டிருக்க மாட்டேன்
என்று பொதுப்பணி அமைச்சர் கூறியிருக்கிறார். இம்மாதிரியாக கெஞ்சிக்
கூத்தாடுவது மற்றவர்கள் நம்மை ஏளனமாகக் கருதுவதற்கு வழி வகுக்கிறது.
இவ்வாறு கெஞ்சுவது சலுகை கேட்பதற்குச் சமமாகும்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துன்
மகாதீர் தாம் கலந்துவிட்ட மலாய் இனத்தினற்காக எவ்வாறு வெளிப்படையாக
போராடியிருக்கிறார் என்பதை நம் இனத்தலைவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது
அவசியமாகும்.
பிரதமரைக் காண்பதுடன், பொதுப்பணி
அமைச்சர் மலேசியன் மருத்துவ மன்றத்தின் சிண்டைப்பிடித்து குலுக்கி மக்கள்
முன் நிறுத்துவதற்கு முயல வேண்டும். மக்களையும் அம்மன்றத்தின் முன் தோன்றி
ஆர்ப்பாட்டம் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களிடம்
வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டியதின் அவசியத்தை அறிந்து
கொள்வார்கள்.
மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்
வழங்குவதிலும் இதே நிலை. எல்லோரும் A1 வாங்க வேண்டும். ஆனால் உபகாரச்
சம்பளம் பெறுவதற்குப் பிச்சை எடுக்க வேண்டும். சீன மாணவர்களின் சார்பில்
சீன அமைச்சர்கள் ஓட வேண்டும். இந்திய மாணவர்களின் சார்பில் பொதுப்பணி
அமைச்சர் ஓட வேண்டும். சீன, இந்திய அமைச்சர்களின் பணிகளில் உபகாரச் சம்பளப்
பிச்சை எடுப்பதும் ஒன்று என்றால் அந்தத் தொகையை சம்பந்தப்பட்ட
அமைச்சர்களிடமே கொடுத்துவிடலாமே. பிறகு ஏன் பொதுச் சேவை இலாக்கா? சலுகை
கேட்பதென்றால் நாம் யாரிடமாவது போய்க் கேட்கத்தானே வேண்டும். அதற்காகத்
தான் பொதுச் சேவை இலாகா.
பொதுச் சேவை இலாகா இந்த உபகாரச்
சம்பள விவகாரத்தில் செய்யும் இழுத்தடிப்பிற்கான காரணத்தை வெளிப்படையாகக்
கூறும்படி மக்கள் அவ்விலாகா முன் கூடியிருக்க வேண்டும். அந்த உணர்வு சலுகை
வாழ்வில் ஊறிப்போன நம்மவர்களுக்கு ஏற்பட வேண்டும். ஆர்ப்பாட்ட உணர்வும்
உரிமை உணர்வும் நம்மவர்களிடையே ஊற வேண்டும்.
ஏ.கே.ஏ. அப்துல் சமது இந்திய
முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர். அவரது மகன் மருத்துவம் பயில
விரும்பினார். போதிய மதிப்பெண்கள் பெறாததால் மருத்துவக் கல்லூரியில் இடம்
கிடைக்கவில்லை. அவரது மனைவி அவரை அவரின் நண்பர் தமிழக முதல்வர்
மு.கருணாநிதியைக் கண்டு தன் மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்
கிடைப்பதற்கான ஏற்பாட்டை செய்யும்படி கேட்டுக் கொண்டார். சலுகை கேட்பது
தவறு என்று கூறி அவ்வாறு செய்ய மறுத்து விட்டார். ஏ.கே.ஏ. அப்துல் சமது
கூறினார்:
‘உரிமையைக் கேள். சலுகையைக்
கேட்காதே. சலுகை கேட்கும் சமுதாயத்திற்கு மானம் இருக்காது.'
(தமிழ்நேசன், 3.7.1999 ப 6)
நமது எதிர்கால சந்தியினர் மானம்
உள்ளவர்களாக வாழ வேண்டுமென்றால் நமது இன்றைய சலுகை கேட்கும் பழக்கத்தை
ஒதிக்கிவிட்டு உரிமை கேட்கும் உணர்வை நம்முள் உருவாக்க
வேண்டும். |