மலேசியத் தமிழர் விடுதலைப் போராட்டம்
மலேசியத் தொழிற்சங்கப்
போராட்டத்தின் வரலாறு, அரசியல், சமூகவியல் ஒரு கண்ணோட்டம்! - ஜீவி காத்தையா
- எஸ்.எ.கணபதி தூக்கிலிடப்பட்டார்!
- பிரிட்டிஷ் பேரரசிற்காக மலாயாவைக் காப்பாற்ற அகில
மலாயா தொழிற்சங்க சம்மேளனம் தடை செய்யப்பட்டது!
பாகம் 4
அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம்
1946ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள்
கிட்டத்தட்ட மலாயாவின் எல்லா மாநிலங்களிலும் பொதுத் தொழிலாளர் சங்கங்கள்
(GLUs) இருந்தன. கைவினைத்திறன் தொழில்கள், வாணிகம், தொழிற்சாலைகள் மற்றும்
பெரும் தொழில்கள் அனைத்திலும் தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இப்பொதுத்
தொழிலாளர் சங்கங்கள் தொழில்கள் அல்லது தொழிற்சாலைகள் என்ற முறையில்
அமைக்கப்படாமல் மாவட்ட அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தன. இப்பொதுத்
தொழிலாளர் சங்கங்கள் சிறப்பான நடைமுறைகளைக் கொண்டிருந்ததோடு,
சுறுசுறுப்பாகவும் செயல்பட்டன. நல்ல பொருளாதார வசதியையும் கொண்டிருந்தன.
சாதாரணத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி செயல்பட வைக்கும் இப்பொதுத் தொழிலாளர்
சங்கங்களின் திறனை அவற்றின் எதிரிகளும் பாராட்டினர்.
சாதாரணத் தொழிலாளர்களை, அதிலும் இந்தியத்
தொழிலாளர்களை, ஒன்றுதிரட்டும் முயற்சியில் இப்பொதுத் தொழிலாளர் சங்கங்கள்
அடைந்த வெற்றி ஜவஹர்லால் நேருவின் அங்கீகாரத்தைப் பெற்றது.
1946ஆம் ஆண்டு மலாயாவில்
சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜவஹர்லால் நேரு இப்பொதுத் தொழிலாளர்
சங்கங்களின் கிளைகள் ஏற்பாடு செய்திருந்த பல பொதுக் கூட்டங்களில்
கலந்துகொண்டு உரையாற்றினார். இப்பொதுத் தொழிலாளர் சங்கங்கள் இந்தியத்
தொழிலாளர்களை ஒன்று திரட்டிய முறைக்கு ஜவஹர்லால் நேரு தமது முழு ஆதரவையும்
தெரிவித்துக் கொண்டார்.
பிப்ரவரி மாதம் 1946ஆம் ஆண்டு அகில
மலாயா பொதுத் தொழிலாளர் சங்கங்கள் சம்மேளனம் (Pan-Malayan Federation of
General Labour Unions (PMFGLU)) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. (PMFGLU
என்ற இவ்வமைப்பு PMFTU என்ற அமைப்பின் முன்னோடி என்பதைக் கவனத்தில் கொள்ள
வேண்டும்.)இந்த PMFGLU என்ற சம்மேளனம் தொழிலாளர்களுக்குத் தேவையான
அனைத்துச் சேவைகளையும் வழங்கியது. நான்கு மொழிகளில் செய்தித்தாள்கள்,
மொழிப்பெயர்ப்பாளர்கள், விளக்கமளிப்பவர்கள், அமைப்பாளர்கள் மற்றும்
திறமையான சம்பளப் பேச்சு வார்த்தை நடத்துபவர்கள் மூலம் தொழிலாளர்களின்
நலன்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தது இச்சம்மேளனம். 1950ஆம் ஆண்டில்
பிரிட்டீஷ் காலனித்துவ அரசினால் உருவாக்கப்பட்டு இன்றுவரையில்
இயங்கிக்கொண்டிருக்கும் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (MTUC) இன்றுகூட ஒரு
மொழியில் ஒரு செய்தித் தாளை வெளியிட முடியாத பரிதாப நிலையில் காலத்தை
ஓட்டிக் கொண்டிருக்கிறது!
இந்த PMFGLU என்ற சம்மேளனம்
தீவிரவாத போக்கைக் கொண்டிருந்தது. தொழிலாளர்கள் அத்தீவிரவாத போக்கை
ஏற்றுக்கொண்டதுடன் அது தேவையான ஒன்றாகக் கருதினார்கள். ஏனென்றால், தங்களின்
இலக்கை அடைவதற்குத் தீவிரவாதம் தேவை என்பதைத் தொழிலாளர்கள் உணர்ந்து
கொண்டிருந்தனர். உண்மையில், இச்சம்மேளனம் மிகக் கடுமையான நெருக்குதலைத்
தராவிட்டால் அரசாங்கமும் முதலாளிகளும் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளை
ஏற்றுக்கொள்வதில்லை.
தொழிலாளர்களின் நலன்களைப் பேணிக்
காப்பதில் PMFGLU காட்டிய தீவிரப் போக்கால் கவரப்பட்ட இந்தியத்
தொழிலாளர்கள் பெருமளவில் இச்சம்மேளனத்தில் இணைந்ததுடன் அதில் அங்கம்
பெற்றிருந்த சீனத் தொழிலாளர்களைவிட மிக அதிகத் தீவிரவாதம் காட்டினர்.
1946ஆம் ஆண்டு மத்திக்குள் எல்லா
மாநிலப் பொதுத் தொழிலாளர் சங்கங்களுக்கும் இந்திய உபதலைவர்கள்
நியமிக்கப்பட்டனர். ஜனவரி மாதம் 1947ஆம் ஆண்டில் எஸ்.எ.கணபதி அகில மலாயா
பொதுத் தொழிலாளர் சங்க சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கப் பட்டார்.
இவ்வாறாக, 1946ஆம் ஆண்டு மத்திக்குள் PMFGLU ஏராளமான செயல்பாடு மிகுந்த
அமைப்பாளர்களைக் கொண்டிருந்தது. இந்தத் தீவிர அமைப்பாளர்கள் மலாயா
கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால், அவர்கள்
அக்கட்சியின் லட்சியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தனர்.
மார்ச் மாதம் 1947ஆம் ஆண்டில்
PMFGLU என்ற அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கங்கள் சம்மேளனம் அகில மலாயா
தொழிற்சங்கங்கள் சம்மேளனம் (Pan-Malayan Federation of Trade Union (PMFTU)
) என்று பெயர் மாற்றம் கண்டது. இப்புதிய சம்மேளனத்தில் 263,598
தொழிலாளர்கள் அல்லது நாட்டின் மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 50
விழுக்காட்டிற்குச் சற்று அதிகமானோர் அங்கத்துவம் பெற்றிருந்தாக
அறிவிக்கப்பட்டது. இச்சம்மேளனம் மலாயாவில் இயங்கிய தொழிற்சங்கங்களில்
80லிருந்து 90 விழுக்காட்டிற்கும் இடையிலான தொழிற்சங்கங்களைத் தனது நேரடிக்
கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
வேலை
நிறுத்த அலைகள்
வேலைநிறுத்தங்களுக்கான முதல்
நடவடிக்கை சிங்கப்பூரில் எடுக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடிக்கு,
முக்கியமாக அரிசி பற்றாக்குறைக்கு, நிவாரணம் கோரி வேலை நிறுத்தங்கள்
துவங்கப்பட்டன. சிங்கப்பூர் நகராண்மைக் கழகம், ரப்பர் தொழிற்சாலைகள்,
பொறியியல் தொழில்கள், போக்குவரத்து சேவைகள் போன்றவற்றில் பணிபுரிந்த சில
18,000 தொழிலாளர்கள் தொடங்கிய வேலைநிறுத்தம் அவர்களுக்கு வெற்றியை ஈட்டித்
தந்தது.
அடுத்த மோதல் சிங்கப்பூர்
அரசுடனானது. அரசின் கணிப்பின்படி 150,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்
வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள். சிங்கப்பூர் அரசு மலாயாவிலிருந்து வந்த
சூங் க்வாங் (Soong Kwang) என்ற தீவிரவாத அமைப்பாளரை சட்டவிரோத
தடுப்புக்காவலிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது வேலைநிறுத்ததில்
ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் கோரிக்கை. 1945ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம்
பிரிட்டீஷ் இராணுவத்தினர் மலாயா வந்தடைந்த சில நாட்களுக்குப் பிறகு புரிந்த
குற்றத்திற்காக சூங் சிங்கப்பூரில் ஐரோப்பியர்களை மாத்திரம் கொண்ட
நீதிமன்றத்தால் மூன்றாவது தடவையாக நடத்தப்பட்ட வழக்கில் குற்றவாளி என
தீர்ப்பளிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப் பட்டார். இதற்கு முன்பு, ஒரு
தலைவரையும் இரண்டு உள்ளூர் உதவியாளர்களையும் கொண்ட சிங்கப்பூர்
நீதிமன்றத்தின் முன் இருமுறை அதே குற்றச்சாட்டின் மீது நடந்த வழக்கில் சூங்
குற்றவாளி அல்ல என்று தீர்ப்புக் கூறப்பட்டிருந்தது. இதனால் சினமடைந்த
தொழிலாளர் கள் சூங்ஙை விடுவிக்கக் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சில
நாட்களுக்குப் பிறகு சூங் க்வாங் விடுவிக்கப்பட்டார்.
வேலை நிறுத்தப் புயல் மலாயாவிலுள்ள
கிட்டத்தட்ட எல்லாத் தொழில்களையும் தாக்கியது. அதிக அரிசி கேட்டு 2000
ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். பினாங்கிலுள்ள உருக்குத்
தொழிலாளர்கள், சிரம்பான் மற்றும் கிமாஸைச் சேர்ந்த ரயில்வே தொழிலாளர்கள்,
கிள்ளான் துறைமுகத் தொழிலாளர்கள், பேராக்கைச் சேர்ந்த ஹைட்ரோ இலக்ரிக்ட்
தொழிலாளர்கள், சுருட்டுத் தொழிலாளர்கள், சிகை அலங்கார தொழிலாளர்கள்,
பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் லோரி ஓட்டுனர்கள் போன்றோர் வேலை நிறுத்தம்
செய்தனர். மலேயன் டின் டிரேஜிங் நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈயம்
தோண்டும் கப்பலை முடக்கினார்கள். பொதுப்பணி இலாகா தொழிலாளர்கள் ஆகியோரும்
அவ்வாறே செய்தனர். வேலை நிறுத்தம் செய்வதில் கைதேர்ந்தவர்களான
நிலக்கரிச்சுரங்கத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் மீண்டும்
இறங்கினார்கள். முன்பைவிட இப்போது தீவிரவாத போக்கைக் கொண்ட தோட்டத்
தொழிலாளர்கள் மேற்குக் கரையோரமிருந்த தோட்டங்களில் வேலை நிறுத்தம்
செய்தனர். மேற்கொண்டு 120 ஈயச் சுரங்க முதலாளிகளிடம் தொழிலாளர்களின்
கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவ்வாறே புகைவண்டி மற்றும் பொறியியல்
தொழிலாளர்களும் செய்தனர். இன்னும் பல வேலைநிறுத்தங்களும் நடைபெற்றன.
காலனித்துவ அரசின் போலித்தனம்,
தொழிலாளர்களின் லட்சியத்திற்கு ஜோன் பிரேசியர் இழைத்த நம்பிக்கைத் துரோகம்
மற்றும் அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கங்கள் சம்மேளனத்தின் சாதனைத்
திறன் ஆகியவற்றை வெளிக்கொணர்ந்தது 2,000 தினச் சம்பள செந்தூல் ரயில்வே
தொழிலாளர்களின் வேலைநிறுத்தமாகும்.
PMFGLUவில் இணைவதற்குத்
திட்டமிட்டிருந்த செந்தூல் தொழிலாளர்கள் சங்கம் (Sentul Workers Union) மே
மாதம் 1946ஆம் ஆண்டு தனது 50 கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகத்தின் முன்
வைத்தது. ரயில்வே நிர்வாகம் இக்கோரிக்கைகள் குறித்து பேசுவதற்குக் கூட
மறுத்துவிட்டது. சம்பளக் கமிஷனின் அறிக்கை குறித்து ஆலோசிப்பதற்கு முன்பு,
1939ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்தில் மாற்றங்கள் செய்வதை
அரசு அனுமதிக்கவில்லை. செந்தூல் தொழிலாளர்கள் சங்கம் வேலைநிறுத்தத்திற்கான
இறுதி எச்சரிக்கையை விடுத்தது.
இச்சங்கத்தின் தலைவரான எம்.பி.
ராஜகோபலை ஜோன் பிரேசியர் மலாயா ஆலோசனை மன்றத்தின் அங்கத்தினராக்கினார்.
அதற்கு கைமாறாக, சம்பளப் பேச்சு வார்த்தை துவங்குவதற்கு முன்பாக
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும்
என்ற ரயில்வே நிர்வாகத்தின் நிபந்தனையை எம்.பி. ராஜகோபால் ஏற்றுக்
கொண்டார். ஜோன் பிரேசியர் மிகத்தீவிரமாக எழுப்பும் நிபந்தனை இது.
ஜோன் பிரேசியர் எம்.பி. ராஜகோபாலைத்
தன் நோக்கத்திற்கு பணியவைத்து விட்டார். ஆனால், அச்சங்க உறுப்பினர்கள்
ரயில்வே நிர்வாகத்திற்கும் எம்.பி. ராஜகோபாலுக்குமிடையில் ஏற்பட்ட
ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். சங்கத்தில் நடந்த கூட்டதில்
சங்க உறுப்பினர்கள் எம்.பி. ராஜகோபாலை அரசாங்கத்தின் கைக்கூலி என்று
சாடினார்கள். வேலைக்குத் திரும்ப முடியாது என்ற அத்தொழிலாளர்களின்
நிலைப்பாடு ரயில்வே நிர்வாகத்தைப் பலவீனப்படுத்தியது. அரசின் பிடி
தளர்ந்தது.
இறுதியில், 1939ஆம் ஆண்டு நிர்ணயம்
செய்யப்பட்ட ஒரு நாள் மொத்த சம்பளமான ஐம்பது காசை ஒரு நாள் வேலைக்கு இரண்டு
வெள்ளி நாற்பது காசாக உயர்ந்த அரசு முன்வந்தது. அன்றைய விலைவாசிக்கு இந்தச்
சம்பள உயர்வு போதுமானதாக இல்லை என்றாலும், சம்பள உயர்வு குறித்து பேச
மறுத்துவிட்ட ரயில்வே நிர்வாகம் 280 விழுக்காடு சம்பள உயர்வை வழங்க
முன்வந்தது தொழிலாளர்களின் திண்மைக்குக் கிடைத்த வெற்றியாகும்.
போர்க் காலத்திற்கு முன்பு
அமுலிலிருந்த வேலை மற்றும் சம்பள முறைகளைத் தொடர்ந்து நிலை நிறுத்துவதில்
அரசாங்கமும் முதலாளிகளும் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதைத் தொழிலாளர்கள்
நன்கு உணர்ந்துகொண்டனர். PMFGLU என்ற சம்மேளனம் நெருக்கடி கொடுத்தால்தான்
அரசாங்கமும் முதலாளிகளும் தங்களின் கோரிக்கைகளுக்கு இணங்குவார்கள்
என்பதையும் தொழிலாளர்கள் அனுபவ மூலமாகத் தெரிந்து கொண்டிருந்தனர்.
தீவிரவாதத்தின் மூலம்தான் பயன்பெற முடியும்
என்பது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்பட்டிருப்பதால், தீவிரவாதம் தேவை
என்று கருதப்பட்டது.
இந்த இணையற்ற வேலை நிறுத்த அலைகளால் சிங்கப்பூருக்கு
ஏற்பட்ட இழப்பு 713,000 வேலை-நாள்களாகும் (Man-days) மலாயாவிற்கு 1,173,000
வேலை-நாள்களாகும். தொழிலாளர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறுவதற்காகவும்,
வறுமையின
் பிடியிலிருந்து
பாதுகாக்கப்படுவதற்காகவும் அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கங்கள்
சம்மேளனம் முன் நின்று தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி 1947ஆம் ஆண்டு
வேலைநிறுத்தங்களை நடத்தியது.
மார்ச் மாதத்திற்குள் எஸ்.எ. கணபதியின் தலைமையில்
மற்றும் அவரது கடமை உணர்வு கொண்ட தோழர்களின் சேவையால் அகில மலாயா
தொழிற்சங்க சம்மேளனம் (PMFTU) அதன் பலத்தின் உச்சக்கட்டத்தை
அடைந்திருந்தது. அதன் போராட்ட ஈடுபாட்டிற்கும் பலத்திற்கும் இன்றுவரை ஈடிணை
கிடையாது.
ஏன் குறைந்த சம்பளம்?
முதலாளிகளுக்கு உயர்ந்த அளவு சம்பள செலவுகளை
ஏற்றுக்கொள்ள இயலவில்லையா அல்லது விருப்பமில்லையா என்ற கேள்வியைத்
தொழிற்சங்கங்கள் சம்மேளனம் எழுப்பியது. அதே கேள்வியை நாட்டிலுள்ள
மற்றவர்களும் கேட்டனர். அக்காலகட்டத்தில், தனியார் சொத்தாக 920,000,000
வெள்ளி நாட்டைவிட்டு வெளியேறியிருந்தது. அந்நிலையில் முதலாளிகள் உயர்ந்த
அளவு சம்பளம் வழங்கியிருக்க முடியும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால்,
பிரிட்டீஷ் இராணுவ நிர்வாகம் (BMA) நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பள அளவிற்கான
உண்மையான காரணம் என்ன என்பது வெளிப்படுத்தப்படவில்லை.
அமெரிக்க அரசாங்கம் பிரிட்டனுக்குக் கொடுத்து வந்த
பொருளாதார (Lend- Lease Aid) உதவியை நிறுத்திவிட்டது. ஆனால், பிரிட்டீஷ்
தொழிற்கட்சி அரசாங்கம் தனக்குத் தேவைப்பட்ட 3.5பில்லியன் அமெரிக்க வெள்ளியை
அமெரிக்க அரசாங்கத்திடம் கடனாகப் பெறுவதற்குக் கெஞ்சிக் கொண்டிருந்தது.
அமெரிக்கர்கள் கடன் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். அதற்கு அவர்களின்
நிபந்தனை இதுதான்: பிரிட்டீஷ் காலனிகளிலிருந்து கிடைக்கும் மூலப்
பொருள்களைக் குறைந்த விலையில் அமெரிக்காவிற்குக் கொடுக்க வேண்டும்
என்பதாகும்.
இந்த அமெரிக்க நிபந்தனையின் அர்த்தம் அவர்கள்
மலாயாவின் ரப்பரையும் ஈயத்தையும் குறைந்த, அதுவும் அவர்கள் நிர்ணயிக்கும்,
விலையில் வாங்குவார்கள் என்பதே. அமெரிக்காதான் மலாயாவின் ரப்பரையும்
ஈயத்தையும் அதிக அளவில் பயன்படுத்திய நாடு. அவர்கள் விதித்த இந்த விலைக்
கட்டுப்பாடுதான் மலாயாத் தொழிலாளர்களுக்கு மிகக் குறைவான சம்பள அளவை
நிர்ணயம் செய்ததற்கான அடிப்படைக் காரணமாகும். எ.ஜெ.ஸ்டோக்வெல் (A.J.Stockwell)
அதனை உறுதிப்படுத்தியுள்ளார்:
“மிக விரைவாக புனர் நிர்மாணம் செய்யப்பட்ட ரப்பர்
மற்றும் ஈயத் தொழில்களால் 1947ஆம் ஆண்டிற்குள் அது (மலாயா) பேரரசின்
அமெரிக்க வெள்ளி சம்பாதிக்கும் மிகப் பெரிய நாடாயிற்று... தலைமை நாட்டின் (பிரிட்டீஷ்)
பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குச் சிறப்பாக உதவியபோது, அதன் சொந்த வாழ்க்கைத்
தரம் யுத்தகாலத்திற்கு முன்பு இருந்த தரத்திற்குக் கீழ் விழுந்து விட்டது.”
காலனிகளுக்கான பிரிட்டீஷ் அமைச்சர் கிரீச் ஜோன்ஸ் (Greech Jones) ரப்பர்
மற்றும் ஈயத்திற்கு விதிக்கப்பட்ட விலைக் கட்டுப்பாட்டை 1948ஆம் ஆண்டில்
உறுதிப்படுத்தினார்.
அமெரிக்காவிடம் பிரிட்டன் கடன் படாமல்
இருந்திருந்தால், பிரிட்டீஷ் இராணுவ நிர்வாகத்தின் சம்பளக் கொள்கை
வேறுபட்டிருக்குமா? இருக்காது. யுத்தகாலத்திற்கு முன்பும், பிறகு கொரியா
யுத்தத்தின் போதும் பெருத்த லாபம் ஈட்டிய போதும் பிரிட்டீஷ்
ஏகாதிபத்தியவாதிகள் பின்பற்றிய தொழிலாளர் சம்பளக் கொள்கைகள் பிரிட்டீஷ்
இரணுவ நிர்வாகம் வேறுபட்ட சம்பளக் கொள்கையை கொண்டிருக்காது என்பதை தெளிவாகக்
காட்டுகின்றன. எந்நிலையிலும், குறைந்த சம்பளம், நிறைந்த லாபம்: அதுதான்
அவர்களின் தாரக மந்திரம்.