மலேசியத் தமிழர் விடுதலைப்
போராட்டம்
மலேசியத் தொழிற்சங்கப்
போராட்டத்தின் வரலாறு, அரசியல், சமூகவியல் ஒரு கண்ணோட்டம்! - ஜீவி காத்தையா
- எஸ்.எ.கணபதி தூக்கிலிடப்பட்டார்!
- பிரிட்டிஷ் பேரரசிற்காக மலாயாவைக் காப்பாற்ற அகில
மலாயா தொழிற்சங்க சம்மேளனம் தடை செய்யப்பட்டது!
பாகம் 3
சுதந்திரம்
ஹைகமிஷனர், சர் செண்டன் தோமஸ், இந்திய
அரசை அணுகி ஆவன செய்ய ஒப்புக் கொண்டார். ஆனால், சீனத் தொழிலாளர்களுக்குக்
கொடுக்கப்படும் 85 காசு சம்பளத்திற்கும் இந்தியத் தொழிலாளர்களுக்குக்
கொடுக்கப்படும் 55 காசு சம்பளத்திற்கும் இடையில் உள்ள பெரும்
வித்தியாசத்திற்கு என்ன நியாயம் இருக்கக்கூடும் என்று வியப்பில் ஆழ்ந்தார்.
ரப்பர் உற்பத்தி, அதன் விலை மற்றும் அதிலிருந்து கிடைக்கும் இலாபம் ஆகிய
எல்லாமே அதிகரித்திருக்கும் போது வெறும் 5 காசு சம்பள உயர்வின்
அடிப்படையில் இந்திய அரசு தன் கொள்கையை மாற்றிக் கொள்ளும் என்பதில் ஹைகமிஷன
ருக்கு நம்பிக்கை இல்லை.
ஆளும் முதலாளித்துவ இனத் தின்
ஊழியரான ஹைகமிஷனர் வியப்பில் ஆழ்ந்ததைத் தவிர வேறு எதுவும்
செய்யவில்லை.
இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் மிக மோசமாகத்
தொடர்ந்து சுரண்டப்படுவதினால் சினமடைந்த ஆர்.எச். நாதன் மற்றும் அவர்தம்
நண்பர்கள் தோட்டத் தொழிலில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை ஆயுதமாகப்
பயன்படுத்த முடிவு செய்தனர். கிள்ளான் மாவட்ட இந்தியர் சங்கத்தைச் சேர்ந்த
ஆர்.எச். நாதனும் அவர்தம் நண்பர்களும் கிள்ளான் மாவட்டத்திலுள்ள இந்தியத்
தோட்டத் தொழிலாளர்களைப் பிப்ரவரி மாதம் 1941 ஆம் ஆண்டில் வேலை
நிறுத்தங்களில் ஈடுபடுத்தினார்கள்.
5 காசு அலவன்ஸ் உயர்வில் திருப்தி
அடையாத இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் மார்ச் மாதம் 1941 ஆம் ஆண்டில் வேலை
நிறுத்தத்தைத் தொடங்கினார்கள். கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த கிளன்மேரி,
புக்கிட் ஜெலுத்தோங், டாமான்சாரா, லாவாங் பாடாங், புக்கிட் கமுனிங், தானா
பாரு, ஈபோர், கேரித் தீவு, சீபோர்ட், சுங்கை சீடு, சுங்கை நிபோங்,
மிட்லேண்ட்ஸ், ஹைலேண்ட்ஸ் ஆகிய தோட்டங்கள் வேலை நிறுத்தத்தில்
ஈடுபட்டிருந்தவையாகும். காந்தி தொப்பி அணிந்திருந்த வேலை நிறுத்தக்காரர்கள்
வெறும் சம்பள உயர்வு மட்டும் கோரவில்லை. தங்களது பொருளாதார, சமூக மற்றும்
அரசியல் முன்னேற்றத் திற்குத் தடையாக விளங்கிய அனைத்தையும் அகற்ற வேண்டும்
எனக் கோரினார்கள். தோட்டத் தொழிலாளர்களின் கோரிக் கைகள்:
1. இந்திய, சீன தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான
சம்பளம்.
2. கொடுமையான தோட்டச்சிப்பந்திகளை அகற்றிவிட்டு அவர்களுக்குப்
பதிலாகத் தமிழ்மொழி பேசும் சிப்பந்திகள் அமர்த்தப்பட வேண்டும்.
3.
குழந்தைகளுக்கு முறையான கல்வி போதிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
4.
ஐரோப்பியர்களும், கருப்பு ஐரோப்பியர்களும் பெண் தொழிலாளர் பாலியல்
வன்முறைக்கு உட்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
5. முறையான வைத்திய
வசதிகள் அளிக்கப்பட வேண்டும்.
6. கள்ளுக் கடைகள் மூடப்பட
வேண்டும்.
7. பேசுவதற்கும், கூடுவதற்கும் சுதந்தரம் அளிக்க
வேண்டும்.
8. உறவினர்களும், நண்பர்களும் தோட்டங்களுக்கு வருவதில்
கட்டுப்பாடு இருக்கக்கூடாது.
9. ஐரோப்பிய நிர்வாகிகள்
மற்றும் ஆசிய சிப்பந்திகள் முன் தோட்டத் தொழிலாளர்கள் சைக்களில் ஏறிச்
செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
10. நாள் ஒன்றுக்கு 10லிருந்து 12
மணி வரையான வேலை நேரத்தை அகற்றப்பட வேண்டும்.
11. குறைகளை முன்
வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது.
12. தொழிலாளர்கள் தங்களின்
நலன்களைக் கவனித்துக் கொள்வதற்கும், அவர்களின் குறைகளை முன் வைப்பதற்கும்
ஒரு மன்றம் அமைக்க அனுமதிக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை, சில
மாற்றங்களுடன், இன்றும் தேவையானவைகளாக இருக்கின்றன. அன்று, 1941 ஆம்
ஆண்டில், இக்கோரிக்கைகள் தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிக
முக்கியமானதாகும். சில தோட்ட நிர்வாகிகள் விட்டுக் கொடுக்க தயாராக
இருந்தனர். மற்ற அனைவரும் பேசுவதற்குக் கூட மறுத்துவிட்டனர். சில
தோட்டங்களில் குடிநீர் வசதியும், அரிசிக்கான படியும்
நிறுத்தப்பட்டன.
ஆர்.எச். நாதனும், அவர்தம்
உதவியாளர்களும் கீழறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம்
சாட்டப்பட்டனர். மேலும், கிள்ளான் மாவட்ட இந்தியர் சங்கம் தடை செய்யப்பட
வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆர்.எச். நாதனை நாடு கடத்துவதற்காகத்
திட்டமும் இருந்தது, ஆனால் நிறைவேற்றப்படவில்லை.
மலாயா மத்திய இந்திய மன்ற
அதிகாரிகள் மற்றும் இந்திய அரசாங்க பிரதிநிதி ஆகியோரின் தலையீட்டினால் ஓர்
ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி: தொழிலாளர்களுக்கு இன்னொரு 5 காசு கூடுதல்
அலவன்ஸ் வழங்கப்படும், சம்பள உயர்வு குறித்து பேசுவதற்கு ஏப்ரல் மாதத்தில்
ஒரு கூட்டம் நடத்தப்படும், இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக யாரும்
தண்டிக்கப்பட மாட்டார்கள். இந்த ஒப்பந்தத்தின் வழி வேலை நிறுத்தம்
முடிவிற்கு வந்தது. ஆனால், கொந்தளிப்புத் தொடர்ந்தது.
ஆர்.எச். நாதன் 350 தொழிலாளர்கள்
கலந்து கொண்ட கிள்ளான் மாவட்ட இந்தியர் சங்கக் கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு
பேசியதாக ரகசிய போலீஸ் அறிக்கை கூறியது:
“கிள்ளான் தொழிலாளர்கள்
அரசாங்கத்திற்கும், முதலாளி களுக்கும் கூட, நல்ல பாடம் படித்துக்
கொடுத்தார்கள் என்பதை இப்போது மலாயாவிலுள்ள ஒவ்வொரு தமிழ்த் தொழிலாள
ருக்கும் தெரியும். விரைவில் நாம் மூட்டிய தீ மலாயா முழுவதும் பற்றி
எரியும். மற்ற மாவட்டங்களிலிருக்கும் தமிழ்த் தொழிலாளர்களுக்கு நாம் ஒரு
உதாரணமாக இருக்கிறோம்.'
மீண்டும் ஏப்ரல் மாதத்தில் ஆர்.எச்.
நாதன் தோட்ட தொழிலாளர்களிடம் பேசுகையில்:
“நாட்டில் தொழிலாளர்
பற்றாக்குறை இருக்கிறது. இப்போது தொழிலாளர் குடியேற்றம் கிடையாது. இது
நெருக்கடியான நேரம்; அதன் காரணமாக உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்
கொள்ளப்படும். முதன் முறையாக ஐரோப்பியர்கள் உங்களை மனிதர்களாக
நினைக்கிறார்கள். இப்போது உங்களுக்கு சரியான சந்தர்ப்பம்
இருக்கிறது.'
தோட்டங்களில் மீண்டும் வேலை
நிறுத்தங்கள் துவங்கின. பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத்தில் இந்தியத்
தொழிலாளர்கள் தலைமையில் சுரங்கத் தொழிலாளர்கள் சம்பள உயர்வை ஏற்றுக் கொள்ள
வைத்தார். இந்தியர்களுக்கிடையிலான பதற்ற நிலை நாடு முழுவதும் பரவக்கூடும்
என அரசாங்கம் கருதியது.
5.5.1941 ஆம் ஆண்டில் ஆர்.எச்.
நாதன் கைது செய்யப்பட்டார். மே மாதம் 7 ஆம் தேதி 300க்கும் மேற்பட்ட
தொழிலாளர்கள் கிள்ளான் தொழிலாளர் துறை முன் கூடி நாதனை விடுவிக்குமாறு
கோரினர். இக்காலகட்டத்தில் நாதன் அவர்களின் ஹீரோ (மறவன்) ஆகிவிட்டார்.
தீவிர ஆதரவாளர்கள் குழு நெகிரி செம்பிலான் வரை சென்று வேலை நிறுத்த
அறைகூவலை பரப்பினர். மே மாதம் 10ஆம் தேதிக்குள் சில 6,000 இந்தியத் தோட்டத்
தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்பட்டது. வேலை
நிறுத்தம் தொடர்ந்து பரவியது. மே மாத மத்திக்குள் சிலாங்கூர் மாநிலத்தில்
கிட்டத் தட்ட எல்லா இந்தியத் தொழிலா ளர்களும், நெகிரி செம்பிலானில் சில
தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கியிருந்தனர். மொத்தத்தில் 20,000
இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் 120 தோட்டங்களில் வேலை நிறுத்தம் செய்தனர்.
அவர்கள் அனைவரும் கிள்ளான் நகரில் ஒன்றுகூடினர். ஒரு கட்டத்தில் கிள்ளான்
நகரம் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததைப்போல்
தோன்றியது.
இந்தக் “கலவரங்கள்" அரசாங்க
அதிகாரத்திற்கு விடப்பட்ட நேரடி சவால் என்று மலாயா காலனித்துவ அரசு
வர்ணித்தது. மே மாதம் 16ஆம் தேதி சிலாங்கூர் மாநிலத்தில் அவசர காலம்
பிரகடனப்படுத்தப்பட்டு இராணுவத்தினர் அழைக்கப்பட்டனர். ஆர்.எச். நாதன் மே
மாதம் 19 ஆம் தேதி நாடு கடத்தப்பட்டார்.
வேலை நிறுத்தக்காரர்கள் கலகத்தில்
ஈடுபட்டிருப்பதாகக் கூறி, இராணுவத்தினருக்கு கலகக்காரர்களை சுடும்படி
உத்தரவிடப்பட்டது. இராணுவத்தினர் சுட்டதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பலர் காயமடைந்தனர். இத்துடன் வேலை நிறுத்தம் ஒரு முடிவுக்கு
வந்தது.
ஆட்சேபம் மற்றும் வேலை நிறுத்தம்
தொடர்ந்த காலத்தில் போலீசார் அவசரகால சட்டத்தின் கீழ் 389 பேர்களைக் கைது
செய்தனர். 21 பேர் நாடு கடத்தப்பட்டனர். 49 பேர் தடுப்புக் காவலில்
வைக்கப்பட்டனர். 186 பேர் கிள்ளான் மாவட்டத்திலிருந்து அகற்றப்பட்டனர்.
இன்னொரு 95 பேர் தாமாகவே இந்தியாவிற்குத் திரும்பினர். கிள்ளான் மாவட்ட
இந்தியர் சங்கம் தடை செய்யப்பட்டது. மே மாத இறுதிக்குள் தொழிலாளர்கள்
வேலைக்குத் திரும்பினார்கள்.
ஆர்.எச். நாதன் மற்றும் அவர்தம்
நண்பர்களும் “கீழறுப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்" மற்றும் “கம்யூனிஸ்ட்
அனுதாபிகள்” என்று அழைக்கப்பட்டனர். இது போன்ற வார்த்தைகள்
சுரண்டப்படுகிறவர்கள் தங்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராக சகஜமாக
பயன்படுத்தும் வார்த்தைகளேயாகும்.
மலாயா காலனித்துவ அரசு ஆர்.எச்.
நாதன் பயன்படுத்திய வார்த்தைகள் அவர் பிரிட்டீஷ் பேரரசிற்கு
விசுவாசமற்றவராக இருந்தார் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியதாகக்
குற்றம் சாட்டியது. 1980களில் கூட ஆர்.எச். நாதன் மற்றும் அவர்தம்
நண்பர்களைப் போல சில நடவடிக்கைகளில் ஈடுபட்டோரின் மீது நாட்டிற்கு விசுவாச
மற்றவர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டது. போலி தொழிற்சங்கங்களை
உருவாக்குவதில் பெயர்பெற்ற காலனித்துவ அரசின் தொழிற்சங்க ஆலோசகரான ஜோன்
பிரேசியர் கூட இந்நாட்டில் யார் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார்
என்பதை இப்படி கூறினார்:
“மலாயாவில் எந்த ஒரு தொழிற்சங்க
தலைவர் சங்க அங்கத்தினர்களுக்காகத் தீவிரமாகப் போராடுகிறாரோ அவரை அரசாங்கம்
கம்யூனிஸ்ட் என்று தவறாமல் முத்திரை குத்தும்."
ஆர்.எச். நாதனும் அவர்தம்
நண்பர்களும் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடினார்கள். தனக்குச்
சொந்தமற்ற ஒரு பேரரசிற்கு நாதன் ஏன் விசுவாசம் காட்ட வேண்டும்?
ஆர்.எச். நாதன் மற்றும் அவர்தம்
ஆதரவாளர்களுக்கு எதிராக மலாயா காலனித்துவ அரசு சுமத்திய குற்றச்சாட்டுகள்
அனைத்தும் சக்தி வாய்ந்த மலாயா தோட்ட முதலாளிகளின் அமைப்பான யு.பி.எ.எம்.
(U.P.A.M.) சுமத்திய குற்றச்சாட்டுகளின் மறு ஒலிபரப்பேயாகும். சிலாங்கூரில்
நடந்த கலவரங்கள் குறித்து யு.பி.எ.எம். இலண்டன் காலனித்துவ அலுவலகத்திற்கு
அனுப்பிய அறிக்கையில் வன்செயல்களைத் தூண்டிவிட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும்
அளிக்கப்படவில்லை.
ஹைகமிஷனர் சர் செண்டன் தோமஸ் தமது
அறிக்கையில் கூறியிருந்தது தான் உண்மை. “தனது செல்வாக்கை நடந்துபோன வேலை
நிறுத்தத்தின் மூலம் விரிவுபடுத்துவதற்கான சந்தர்ப்பத்தை நழுவவிட்டதற்காகக்
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகம் உள்ளூர் சீன கம்யூனிஸ்ட் கட்சியைக்
(எம்சிபி) கடுமையாகக் கண்டித்தது", என்று ஹைகமிஷனர் தமது அறிக்கையில்
கூறியிருக்கிறார். கிள்ளான் மாவட்ட இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய
வேலை நிறுத்தங்களில் கம்யூனிஸ்ட்டுகள் ஈடுபடவில்லை. அப்படியே அவர்கள்
ஈடுபட்டிருந்தால், அதனால் என்ன? ஜப்பானியர்களுக்கு எதிராகப் போராட
பிரிட்டீஷார் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியைப் பயன்படுத்தவில்லையா?
கடந்துபோன வேலை நிறுத்தங்களும்,
அதன் விளைவாகச் சிந்திய இரத்தமும் தேவைதானா என்ற கேள்வி தவறாமல்
எழுப்பப்பட்டது. மண்டியிட்டு சலுகை பிச்சை கேட்பவர்களுக்கு அது தேவையில்லை.
ஆனால், தங்களின் உரிமைகளைப் பெற விரும்புகிறவர்களுக்கு, பல நூற்றாண்டுகளாக
மனித உரிமைகளுக்காக நடந்த கடும் போராட்டங்களின் வழி உருவான கோட்பாடு
“போராடு, மடி” என்பதாகும். அதன்படி, கிள்ளான் மாவட்டத்தில் சில இந்தியர்கள்
தங்களின் தொழிற்சங்க அரசியல் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்தனர். அத்
தியாகம் மற்றவர்கள் அவர்களை பின்பற்றுவதற்கு விடுத்த
சமிக்கையாகும்.
ஜப்பானியரின்
ஆட்சி
மற்ற முதலாளிகளுக்கு எதிராக வேலை
நிறுத்தங்களும் வேலை நிறுத்த பயமுறுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டன. மேலும்,
மே மாதம் 1946ஆம் ஆண்டில் தோட்ட முதலாளிகள் யு.பி.எ.எம். (UPAM) என்னும்
அமைப்பை உருவாக்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து ஈயச் சுரங்க முதலாளிகளும்
எம்.எம்.இ.எ. (MMEA) என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்கள். இவ்வமைப்புகள்
பிரிட்டீஷ் இராணுவ நிர்வாகத்துடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டன.
எனினும், இத்தொடர்புகள் போர்க் காலத்திற்கு முன்பு காலனித்துவ அரசுடன்
இருந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கவில்லை.
இதே காலகட்டத்தில் பிரிட்டீஷ்
இராணுவ நிர்வாகத்தின் இரண்டாவது திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில்
ஜோன் பிரேசியர் தீவிரமாக இறங்கி இங்குள்ள தொழிற்சங்கங்கள் தங்களின் அரசியல்
ஈடுபாடுகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என வற்புறுத்திக்
கொண்டிருக்கும் வேளையில் மலாயாவிலும் சிங்கப்பூரிலிலும் இருந்த முதலாளிகள்
தங்களின் அரசியல் நலன்களைப் பிரதிநிதிப்பதற்காக “மலாயா மன்றம்” மற்றும்
“சிங்கப்பூர் மன்றம்" என்ற இரு அமைப்புகளை சிங்கப்பூர் மற்றும் மலாயா
காலனித்துவ அரசுகளின் ஆதரவுடன் நிறுவினார்கள். தொழிலாளர்களின்
தொழிற்சங்கங்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. ஆனால் முதலாளிகளின் அரசியல்
ஈடுபாட்டிற்குத் தடையில்லை. இது அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை
மட்டுமல்ல, இன்றும் அதே நிலைதான்.
பிரிட்டீஷ் ரயில்வே
தொழிற்சங்கவாதியான ஜோன் பிரேசியரை மலாயாவிற்கு கொணர்ந்தது பிரிட்டீஷ்
அரசாங்கம், பிரிட்டீஷ் முதலாளிகள் மற்றும் பிரிட்டீஷ் தொழிற்சங்க காங்கரஸ்
(BTUC) ஆகியவற்றுக் கிடையே உருவான சூழ்ச்சியின் ஓர் அங்கமாகும்.
இந்நாட்டிலுள்ள தொழிற்சங்கங்களை அரசியல் ஈடுபாடற்ற தொழிற்சங்கங்களாக மாற்ற
வேண்டும். அவ்வாறு செய்வது சாத்தியப்படாவிட்டால், அரசியல் சார்பற்ற புதிய
தொழிற்சங்கங்களை உருவாக்க வேண்டும். இதுதான் ஜோன் பிரேசியரின்
பணி.
அரசியல் ஈடுபாடற்ற தொழிற்சங்கங்களை
உருவாக்கும் திட்டத்தை ஆரம்பித்தலும், அதனை ஏற்றுக் கொள்வதும் பிரிட்டீஷ்
தொழிற்சங்க காங்கரசின் (BTUC) கொள்கை நிலைக்கு எதிர்மாறானதாகும். 1928ஆம்
ஆண்டில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுக்கும் முதலாளிக்குமிடையே நடந்த
போராட்டத்தின் விளைவாக நிலக்கரி சுரங்கங்கள் கதவடைப்புச் செய்யப்பட்ட
காலத்தில் நோட்டிங்ஙெம் ஸ்யரில் (Nottinghamshire) தோன்றிய சுரங்கத் தொழில்
(அரசியலற்ற) தொழிற்சங்கம் (Mining Industrial (Non-Political) Union)
என்றழைக்கப்பட்ட அமைப்பை பிரிட்டீஷ் தொழிற்சங்க காங்கரசு 1928ஆம் ஆண்டில்
மிகக் கடுமையாகச் சாடியது. “அரசியல் தொழிற்சங்கங்களில் மீது
திணிக்கப்பட்டது. அரசியல் கிளர்ச்சிகள் மூலமாகவே அவை பொதுமக்களின்
கருத்தைக் கவர முடிந்தது", என்று பிரிட்டீஷ் தொழிற்சங்க காங்கரஸ்
ஆணித்தரமாகக் கூறியது. தொழிற்சங்கங்களைப் “பாராளுமன்றம் சமமாக நடத்த
வேண்டும்” என்பற்காகத்தான் 1900ஆம் ஆண்டில் தொழிற்சங்கங்கள் தொழிற்கட்சியை
உருவாக்கியதாகப் பிரிட்டீஷ் தொழிற்சங்க காங்கரஸ் விளக்கம் தந்தது. ஆகவே,
தொழிற்சங்கங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதைப் பிரிட்டீஷ் தொழிற்சங்க
காங்கரஸ் இவ்வாறு அழுத்தமாகக் கூறியது:
“தொழிற்சங்கங்களுக்கான தெளிவான
போக்கு என்னவென்றால் அவை அரசியல் துறவறம் பூண வேண்டுமென்பதல்ல, மாறாக அவை
தங்களின் கடந்தகால ஈடுபாட்டை விட இன்னும் அதிகமான செயலாக்கத்துடன் அரசியல்
நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்."
போர்க்காலத்திற்கு முற்பட்ட
மலாயாவில் தொழிற்சங்கங்கள் ஓரளவிற்கு அரசியலில் ஈடுபட்டிருந்தன. முறைப்படி,
தொழிற்சங்கக் காங்கரஸ்களுக்கெல்லாம் தாயாகக் கருதப்படும் பிரிட்டீஷ்
தொழிற்சங்கக் காங்கரஸின் பிரதிநிதி என்ற முறையில் ஜோன் பிரேசியர்
நாட்டிலுள்ள தொழிற்சங்கங்கள் போர்க்காலத்திற்கு முன்பு கொண்டிருந்த அரசியல்
ஈடுபாடுகளைவிட இன்னும் தீவிரமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உதவி
இருக்க வேண்டும். அவர் இங்கு அனுப்பி வைக்கப்பட்டது தொழிற்சங்கங்களுக்கு
உதவுவதற்காக அல்ல. அரசியல் சார்பற்ற தொழிற்சங்கங்களை நிறுவி அதன் மூலம்
பிரிட்டீஷ் முதலாளிகள் மற்றும் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கு உதவ
வேண்டும் என்ற உத்தரவுடன் அவர் இங்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஜோன் பிரேசியர் தனது அரசியல்
சார்பற்ற, மக்களாட்சி முறையிலான, உண்மையான, சுதந்தரமான, பொறுப்புள்ள
மற்றும் முழுமையான தொழிற்சங்க தத்துவங்களைப் போதிப்பதில் தீவிரமாக
இறங்கினார். மார்ச் மாதம், 1947 ஆம் ஆண்டிற்கு முன்பு அவரது போதனைகள் மிகக்
குறைந்த அளவிலேயே வெற்றி கண்டன. அவரது போதனைகளை ஏற்றுக் கொண்ட சில
தொழிற்சங்கங்கள் பொதுச் சேவைத்துறை மற்றும் தனியார்த்துறை ஆகியவற்றைச்
சேர்ந்த சிப்பந்திகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்களைக்
கொண்டவையாகும். அச்சங்கங்கள் மிகச் சிறியவை. அவை தங்களின் தேவைகளை
முதலாளியிடம் தட்டிக் கேட்கும் நிலையில் இல்லை.
ஆங்கிலம் படித்தவர்களின் தலைமையிலான
இச்சிறு சங்கங்கள் தங்களின் குறைகளைக் களைவதற்குக் கருணை காட்டுமாறு
எழுத்துமூலம் விண்ணப்பம் செய்யும் முறைப்பாட்டைக் கொண்டிருந்தனர். அவ்வாறு
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் தொழிற்சங்கங்களில் ஒன்று தோட்ட சிப்பந்திகள்
சங்கமாகும். தோட்டத் தொழிலின் நன்மைக்காக இச்சங்கம் ஆற்றிய சேவையைப்
பிரிட்டீஷ் ஹைகமிஷனர் பாராட்டியிருக்கிறார். அவ்வாறான சேவைகளை வழங்கி ஜோன்
பிரேசியரிடம் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த இன்னொரு தொழிற்சங்கம் நெகிரி
செம்பிலான் இந்தியத் தொழிலாளர் சங்கமாகும். 1946 ஆம் ஆண்டின்
ஆரம்பக்காலத்தில் உருவாக்கப்பட்ட இச்சங்கத்தை வழிநடத்தியவர் பி.பி.நாராயணன்
ஆவார். இச்சங்கம் இந்தியர்களின் நலங்களுக்காக மட்டுமே செயல்பட்டது. இவர்
பிற்காலத்தில் மாலாயாவின் காலனித்துவ அரசு, காலனித்துவ முதலாளிகள் மற்றும்
லண்டன் காலனித்துவ அலுவலகத்தின் ஒப்புதலுடன் மலேசிய தொழிற்சங்க காங்கரசின்
தலைவரானார். அதன் பின்னர் அவர் அனைத்துலகச் சுதந்தர தொழிலாளர்
சம்மேளனத்தின் (ICFTU) தலைவராக்கப்பட்டார்.
ஆக மொத்ததில், 1946-1947 ஆம்
ஆண்டுகளில், ஜோன் பிரேசியின் தயவில் இயங்கிய இச்சிறு தொழிற்சங்கங்கள் அகில
மலாயா பொதுத் தொழிற்சங்க சம்மேளனத்தில் (PMGLU) இணைந்திருந்த
தொழிற்சங்கங்கள் விடுத்த சாவால்களைச் சமாளிக்க அரசாங்கத்திற்கும் மற்றும்
முதலாளிகளுக்கும் எந்த ஒரு வகையான உதவியையும் நல்க
முடியவில்லை.