மலேசியத் தமிழர் விடுதலைப் போராட்டம்
மலேசியத் தொழிற்சங்கப்
போராட்டத்தின் வரலாறு, அரசியல், சமூகவியல் ஒரு கண்ணோட்டம்! - ஜீவி காத்தையா
- எஸ்.எ.கணபதி தூக்கிலிடப்பட்டார்!
- பிரிட்டிஷ் பேரரசிற்காக மலாயாவைக் காப்பாற்ற அகில
மலாயா தொழிற்சங்க சம்மேளனம் தடை செய்யப்பட்டது!
பாகம் 2
இந்த வேலைநிறுத்த அலைக்கு வித்திட்ட நிகழ்வுகளின் ஆய்வு,
வேலைநிறுத்தம் அமுல் படுத்தப்பட்ட முறை மற்றும் வேலைநிறுத்தம்
செய்தவர்களின் நோக்கம், போலீஸ் தலைமை அதிகாரியின் கூற்று தவறானவை என
நிருபிக்கின்றன. இந்த வேலைநிறுத்த அலையின் ஆரம்பக்கட்டத்தில்
சட்டத்திற்குப் புறம்பான மற்றும் பொதுவுடைமை சார்புள்ள அமைப்புகள் இருந்தன.
ஆனால் இவ்வேலைநிறுத்தம் விரிவடைந்து மற்ற இடங்களுக்குப் பரவியது, ஒரு
சுயேட்சையான செயலாகும். இந்த வேலைநிறுத்தங்கள் ஒரு கட்டுப்பாடான,
ஒருங்கிணைக் கப்பட்ட முறையில் அமையவில்லை. வேலை செய்யும் இடத்தில் உருவான
சில சம்பவங்கள் வேலைநிறுத்தம் ஏற்படுவதற்கான காரணமாயின. வேலைநிறுத்தம்
துவங்குவதற்கு முன்பு கோரிக்கைகள் முறைமையாக எழுப்பப்படவில்லை. மேலும்,
தொழிலா ளர்கள் சார்பில் பிரதிநிதிகளை நியமிப்பதில் சிரமம் காணப்பட்டது.
மலாயா கம்யூனிசக் கட்சியால் ஏற்பாடு செய்யப்படும் வேலைநிறுத்தத்தில்
மேற்கூறிய தன்மைகளைக் காணமுடியாது.
வேலைநிறுத்தங்கள் சுரண்டப்படுகின்ற தொழிலாளர்களின்
ஆர்ப்பாட்ட மொழி. இந்த வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள்
அவர்கள் வேலை செய்யும் தொழில்களின் அன்றைய இலாபகரமான போக்கை
அறிந்திருந்ததுடன், தங்களின் கடந்த கால குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும்,
கூடுதலான நன்மைகளைப் பெறவும் உறுதி பூண்டிருந்தனர். அன்றைய காலகட்டத்தில்
ரப்பர் விலை 250 விழுக்காடு உயர்வு கண்டிருந்தது. பத்து ஆராங் நிலக்கரி
நிர்வாகம் 1935ல் 12 விழுக்காடு லாபத்தையும் 1936ல் 15 விழுக்காடு
லாபத்தையும் அடைந் திருந்தது.
தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சம்பள உயர்வுக்கான
கோரிக்கைகளை எழுப்புவதற்கு இது ஒரு சாதகமான நேரமாக இருந்தது.
இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி 20லிருந்து 25 விழுக்காடு வரை சம்பள உயர்வு,
எட்டு மணி நேர வேலை, வைத்திய வசதிகள், ஓய்வு ஊதியங்கள், சிறந்த வீட்டு
வசதிகள் மற்றும் பல தேவைகள் அடங்கிய கோரிக்கைகளை எழுப்பினார்கள். ஒப்பந்த
அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலா ளர்களின் அவதிகளைக்
களைவதற்கும் கோரிக்கை விடப்பட்டது.
கடந்த காலங்களில் முதலாளிகளின் அல்லது
போலீஸ்காரர்களின் மிரட்டல் ஒன்றே வேலைநிறுத்தம் செய்ய முனையும்
தொழிலாளர்கள் தங்கள் திட்டங்களை கைவிடப் போதுமானதாக இருந்தது. ஆனால்,
இப்போது நிலைமை வேறாக இருந்தது. முதலாளிகளின், போலீஸ்காரர்களின்
மிரட்டல்களைச் சந்திக்க தொழிலாளர் கள் தயாராக இருந்தனர். அந்த மனநிலையை
பத்து ஆராங் தொழிலா ளர்கள் 1937ஆம் ஆண்டு மார்ச் மாதம் பத்து ஆராங்கில்
நடந்த அனுதாப வேலைநிறுத்தத்தில் வெளிக்காட்டினர். அத்தொழிலாளர்கள் நிலக்கரி
சுரங்கங்களையும் பத்து ஆராங் நகரையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்க்
கொண்டு வந்து ஒரு “சோவியத்" முறை ஆட்சியை உருவாக்கினர். இந்நிலை மூன்று
வாரங்களுக்கு நீடித்தது. படை பலத்தை உபயோகித்து அரசாங்கம் மீண்டும் பத்து
ஆராங்ஙை தன்வசம் எடுத்துக் கொண்டது. பத்து ஆராங் தொழிலாளர் காட்டிய மன
உறுதியும் போர்க்குணமும் அவர்களுக்கு கணிசமான வெற்றியை ஈற்றுத்
தந்தது.
இக்காலகட்டத்தில் தொழிலாளர்கள் தங்களின் பொருளாதார
நிலையை மேம்படுத்திக் கொள்வதற்காக தங்களது நடவடிக்கைகளையும்
போராட்டங்களையும் தொடர்ந்தனர். சீனாவிலும் இந்தியா விலும் அப்போது
நடந்துகொண்டிருந்த தேசிய விடுதலைப் போராட்டங்கள் இங்குள்ள தொழிலாளர்களின்
போராட்ட உணர்விற்குப் புத்துயிர் ஊட்டின. அதே நேரத்தில், மலாயா கம்யூனிஸ்ட்
கட்சியும் தொழிலாளர் களின் போராட்டங்களுக்குத் தனது ஆதரவை நல்கியது.
ஐரோப்பாவில் தொடங்கிய இரண்டாவது உலகப் போர் தொழிலாளர்களின் போராட்டத்
திற்குச் சாதகமாக அமைந்தது.
இந்த உலகப் போரின் காரணமாக இங்குள்ள மக்களின்
வாழ்க்கைச் செலவு 16 விழுக்காடாக உயர்ந்தது; மலாயாவின் ரப்பர், டின் போன்ற
மூலப் பொருட்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டது. இச்சூழ்நிலையில், மூலப்
பொருட்களின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு அதிகமான தொழிலாளர்கள்
தேவைப்பட்டனர். இதுதான் சரியான நேரம். தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை
எழுப்பினர்.
தங்களின் கோரிக்கைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் ஏற்றுக்
கொள்ளப்படாவிட்டாலும் அல்லது கோரிக்கைகள் முழுமையாக ஏற்றுக்
கொள்ளாப்படாவிட்டாலும், தொழிலாளர்கள் உடனடியாக வேலை நிறுத்தத்தில்
ஈடுபட்டனர். சலவைத் தொழிலாளர்கள், ரோத்தான் வெட்டுத் தொழிலாளர்கள், ரப்பர்
மற்றும் அன்னாசிப்பழத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள், பகாவ் பால் வெட்டுத்
தொழிலாளர்கள், சிங்கப்பூர் துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் பலவிதமான
தொழில்களில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை எழுப்பி வேலை
நிறுத்தங்களில் ஈடுபட்டனர். 1939ல் மட்டும் 80க்கும் குறையாத வேலை
நிறுத்தங்கள் நடந்தன. 1940ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இன்னும் அதிகமான வேலை
நிறுத்தங்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இம்முறை தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு விரைவில்
தீர்வு காணப்பட்டது. ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றின் போர்த்துறை
தொழில்களின் மூலப் பொருட்களின் தேவைகளும் அப்பொருட்களின் அதிக அளவிலான
உற்பத்தி பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் தொழிலாளர்களின் கோரிக்கைகள்
வழக்கத்திற்கு மாறாக விரைவிலேயே தீர்க்கப்பட்டன.
போர்ப்பாதையில் தமிழ்த் தொழிலாளர்கள்
1939க்கும் 1940க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில்
இந்நாட்டின் தமிழ்ச் சமுதாயம் முழுமையும் கடும் சினம் கொண்டிருந்தது.
தாங்கள் சுரண்டப்படுவதற்காக மட்டுமே இங்கு இருப்பதாக அவர்கள் உணர்ந்து
கொண்டனர். இந்த நாட்டை பாதுகாப்பதற்காக இந்தியாவின் பஞ்சாப் இராணுவம் இங்கு
நிறுத்தப்பட்டிருக்கிறது. மலாயா பிரிட்டீஷ் வல்லரசின் “டாலர் தொழிற்சாலை".
அதனை நடத்துவதற்குத்தான் இங்கு தமிழ்த் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
போருக்குத் தேவையான மிக முக்கிய மூலப்பொருட்களை போர்த் தளவாடங்களை உற்பத்தி
செய்யும் அமெரிக்க தொழில்களிடம் விற்று அமெரிக்க டாலர்களை சம்பாதிப்பதற்காக
இங்குள்ள இந்திய தொழிலாளர்கள் அடிமைகளைப் போல் நடத்தப்பட்டனர். இவ்வாறு
அமெரிக்க டாலர் சம்பாதிக்காவிட்டால் பிரிட்டீஷ் வல்லரசு தான் பட்ட கடனை
அடைக்க முடியாது. பிரிட்டீஷ் வல்லரசின் கம்பீரத் தோற்றத்தை நிலை நிறுத்த
மலாயாவில் இந்தியர்களின் இரத்தம் உறிஞ்சப்பட்டது.
1918க்கும்
1938க்கும் இடையில் இந்நாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பினால் பெற்ற
வருமானத்திலிருந்து 28 மில்லியன் ஸ்டர்லிங் பவுனை மலாயா காலனித்துவ அரசு
பிரிட்டீஷ் வல்லரசின் பாதுகாப்புச் செலவிற்காக வழங்கியது. 1939இல் இன்னொரு
5 மில்லியன் ஸ்டர்லிங் பவுனை வழங்கியது. இவையெல்லாம் அன்பளிப்புகள்!
யாருடைய உழைப்பை யார் யாருக்கு அன்பளிப்பது? அதுமட்டுமல்ல; மலாயா
காலனித்துவ அரசு பிரிட்டீஷ் வல்லரசிற்கு மேலும் ஐந்தரை மில்லியன் ஸ்டர்லிங்
பவுனை வட்டியில்லாக் கடனாகக் கொடுக்க ஒப்புக் கொண்டது.
பிரிட்டீஷ் வல்லரசிற்கு வாரி வாரி வழங்கிய மலாயா
காலனித்துவ அரசும், காலனித்துவ முதலாளிகளும் தமிழ்த் தொழிலாளர்களுக்கு
எவ்வித சம்பள உயர்வும் கொடுக்க மறுத்து விட்டனர். அரசியல் உரிமைகளும்
கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழ்த் தொழிலாளர்கள், குறிப்பாகத்
தோட்டத் தொழிலாளர்கள், கொண்டிருந்த கடுங்கோபம் நியாயமானதே.
1939ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து
தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளம் 50 காசு. ஜனவரி
1940திற்குள் சீனத் தொழிலாளர்களின் சம்பளம் 75 காசு. ஜனவரி 1941குள்
அவர்களின் சம்பளம் 85 காசாக உயர்ந்தது. சில தோட்டங்களில் சீனத்
தொழிலாளர்களின் சம்பளம் $1.20 காசாக ஏற்றம் கண்டது. ஆனால், தமிழ்த்
தொழிலாளர்களின் சம்பளம் 50 காசிலேயே நின்றது. இந்த நிலையிலும், கல் நெஞ்சம்
படைத்த தோட்ட முதலாளிகள் தமிழ்த் தோட்ட பெண் தொழிலாளர்களிடம்
சம்பளமில்லாமல் வேலை வாங்கினார்கள். இச்சுரண்டலுக்குத் தோட்ட முதலாளிகள்
இட்ட பெயர் “சந்தோஷ வேலை".
இவ்வளவு சுரண்டல்களுக்கிடையே கடந்த காலத்தில்,
ரப்பரின் உற்பத்தி பெருமளவில் உயர்வு கண்டது. 1938இல் 244,084 பவுண்டாக
இருந்த ரப்பர் உற்பத்தி 1940இல் 331,589 பவுண்டாக உயர்ந்தது. ஆனால்
தொழிலாளர்களின் எண்ணிக்கை உயரவில்லை. அது 1939ஆம் ஆண்டு எண்ணிக்கையிலேயே
இருந்தது.
இவ்வாறு சுரண்டப்பட்ட சூழ்நிலையில், பொதுவாக தமிழர்கள்
கோபம் கொள்வதற்கும், ஆர்ப்பாட்டங்கள் செய்வதற்கும் தகுந்த காரணங்கள் உண்டு
என உணர்ந்தனர். ஆனால், சில தமிழர்கள், சற்று உயர்ந்த நிலை யிலிருந்தவர்கள்,
காலனித்துவ அரசிடம் பல்லிளித்துக் கூழைக்கும்பிடு போடுவதன் மூலம் சில
சலுகைகளைப் பெற முடியும் என்று எண்ணினார்கள். இவ்வாறான தமிழர்கள் அன்றும்
இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள்.
இரண்டாவது உலகப் போரில் பிரிட்டீஷ் வல்லரசை ஆதரிக்க
இந்திய தேசிய காங்கரஸ் கட்சி மறுத்து விட்டது. எங்கே இங்குள்ள தமிழ்த்
தொழிலாளர்கள் இந்திய தேசிய காங்கரஸ் கட்சியின் கொள்கையைப் பின்பற்றி வேலை
நிறுத்தங்களில் ஈடுபட்டு போர்த்தளவாட உற்பத்திக்கு தேவையான
மூலப்பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற கவலையில் மலாயா
காலனித்துவ அரசு மூழ்கியிருந்தது. இதனைத் தெரிந்து கொண்ட அந்தச் சில
தமிழர்கள், இந்திய தேசிய காங்கரஸ் கட்சியின் கொள்கைக்கு மாறாக தங்களது
விசுவாசத்தை மலாயா பிரிட்டீஷ் ஹைகமிஷனரிடம் ஈடு வைத்தனர். அத்துடன் “மனித
இனம், மக்களாட்சி மற்றும் உலக சுதந்திரம்" ஆகியவற்றுக்காக ஐரோப்பாவில்
நடந்து கொண்டிருக்கும் போரை ஆதரிப்பதாகவும் உறுதியளித்தனர்.
தங்களின் வாக்குறுதியைச் செயல்படுத்தும் பொருட்டு
சிலாங்கூர் இந்தியன் தேசப்பற்று நிதிக் குழு ஒன்றை நிறுவினார்கள்.
இக்குழுவின் தலைவர் கே.கே. பென்ஜமின். இவர் சிலாங்கூர் இந்திய சங்கத்தின்
தலைவருமாவார். இக்குழுவில் அங்கம் பெற்றிருந்த மற்றவர்களுடன்
குறிப்பிடத்தக்க இருவர், ஆர்.எச். நாதன் மற்றும் ஓய்.எஸ். மேனன், இடம்
பெற்றிருந்தனர். இவ்விருவரும் ஏன் இக்குழுவில் இணைந்தனர் என்பது
தெரியவில்லை. ஏனென்றால், இவ்விருவரும் இக்குழுவின் நோக்கத்திற்கு
முற்றிலும் மாறுபட்ட செயல்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். 1939ஆம் ஆண்டு
அக்டோபர் மாதத்திற்குள் சிங்கப்பூர் தமிழர்கள் $ 47,486.50 காசும்,
சிலாங்கூர் தமிழர்கள் $ 1045யும் ஐரோப்பிய போரை வெற்றிகரமாக நடத்துவதற்குத்
திரட்டினார்கள்! இக்குழுவினர் தங்களின் ஆதரவாளர்களுக்கு வழங்கிய ஆலோசனை
இதுதான்: “உங்களின் உரிமைகளை அடித்துக் கேட்பதற்கு இது ஏற்ற தருணம்
அல்ல."
இந்த இந்திய தேசப்பற்று நிதிக் குழுவின் கருத்திற்கு
முற்றிலும் எதிர்மாறான கருத்தினைக் கொண்ட வர்கள் மலாயா மத்திய இந்திய
மன்றத்திலும், அதன் மாநில மற்றும் மாவட்ட மன்றங்களிலும் இருந்தனர். இவர்கள்
தமிழ்த் தொழிலாளர்கள் படுமோசமாகச் சுரண்டப் படுவதையும், மற்றும் காலனித்துவ
முதலாளிகள், காலனித்துவ அரசு தமிழர்களை அவமானப்படுத்துவதையும் கண்டு
கொதித்து நின்றனர். இவர்களில் முக்கியமானவர்கள் ஒய்.எஸ். மேனன், ஒய்.கே.
மேனன், ஆர்.எச். நாதன், ஆர்.எஸ். நாதன், சி.வி. குப்புசாமி, எஸ். அமலு
மற்றும் ஆர்.கே. தங்கையா. இவர்களை கம்யூனிஸ்ட்டுகள், சோஷலிஸ்ட்டுகள்,
ஆர்ப்பாட்டக் காரர்கள் என்று முத்திரை குத்தினார்கள். உண்மையில், இவர்களது
பேச்சுகளை ஆராய்ந்தால் இவர்கள் புரட்சிகர மார்க்சிஸ்டுகள் அல்லர்; மாறாக
தீவிர தேசியவாதிகள் என்று தெரியவரும்.
இவர்களின் நோக்கம், சுகாதாரம், கல்வி மற்றும்
குடிப்பழக்கத்தை ஒழிப்பது போன்ற அடிப்படை சீர்திருத்தங்களைக் கொண்டு
வருவதாகும். ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங்கினார்கள். கிள்ளான் மாவட்ட
இந்தியர் சங்கம் “நன்னடத்தை, ஒற்றுமை மற்றும் மது அல்லது விஷம்?" என்ற
மூன்று கையேடுகளைத் தயாரித்து தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கியது.
இவற்றில் “ஒற்றுமை" என்ற கையேட்டை காலனித்துவ அரசு தடை செய்தது. அக் கையேடு
காணப்படவில்லை. அக் கையேட்டில் என்ன எழுதப்பட்டிருக்கும் என்பதை ஆர்.எச்.
நாதன் 1941ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த கூட்டங்களில்
பேசியதாகத்தான் இருக்க வேண்டும். அவற்றில் ஒன்று: “இப்போது பெரும்பாலான
கூலிகளுக்கு தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான வேறுபாடு என்ன
என்பது தெரிந்திருக்கும். ஒத்துழைப்பு நமது தாரக மந்திரம். தோட்ட
முதலாளிகளும் அவர்களது கையாட்களும் இந்த ஒத்துழைப்பை உடைப்பதற்கு
முனைவார்கள். ஆனால் அவர்களை நமது நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ய
அனுமதிக்கக் கூடாது. ஒற்றுமையே பலம். விருப்பத்திற்கேற்ற உடை அணியுங்கள்...
விரும்பினால் காந்திக்குல்லா அணிந்து கொள்ளுங்கள். ஆனால் அதை
அகற்றக்கூடாது. அவ்வாறே நாம் பொதுச்சாலையில் செல்லும்போது சைக்கிளிலிருந்து
இறங்கக்கூடாது.
ஒய்.கே. மேனனும் 1941ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இதே
தொனியில் தான் பேசினார்:
“நாம் இம்மன்றத்தைத் துவங்குவதற்கு முன்பு
நீங்கள் எல்லோரும் முதலாளிகளைக் கடவுளாகவும் நம்மை அடிமைகளாகவும்
எண்ணியிருந்தீர்கள். இப்போது உங்களில் குறைந்தது 25 விழுக்காட்டினர் அது
அப்படி அல்ல என்பதை உணர்ந்திருக்கிறீர்கள். நாம் தமிழர்கள். நாம்
யாருக்கும் அடிமைகள் இல்லை."
இவ்வாறாக ஆர்.எச். நாதன், ஒய்.எஸ். மேனன், ஒய்.கே.
மேனன் அவர்தம் கூட்டத்தினர் நான்கு தலைமைத்துவ கூட்டத்தினரை - அதாவது,
தோட்டப்பள்ளி ஆசிரியர்கள், கண்காணிகள், படித்த தொழிலாளர்கள், மற்றும்
இந்நாட்டிலேயே பிறந்த தொழிலாளர்கள் - கொண்டு மன்றங்களை உருவாக்கினார்கள்.
அவர்களின் கூட்டு முயற்சியால் இம்மன்றங்களில் சேர்ந்த அங்கத்தினர்களின்
எண்ணிக்கை பெருமளவில் கூடியது. இந்த மன்றங்கள் அங்கத்தினர்களைப் பெருமளவில்
சேர்ப்பதற்காக மட்டும் உருவாக்கப்பட்டதல்ல. இம்மன்றங்கள் அதன்
அங்கத்தினர்களுக்கு தொழிற்சங்க தத்துவத்தின் நோக்கத்தையும் அரசியல்
உரிமைகளையும் அவர்களின் உள்ளத்தில் விதைத்தது. இதன் விளைவாக, இம்மன்ற
அங்கத்தினர்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராட, தேவையானால், உயிரையும்
இழக்க, தயாரானார்கள்.
தமிழர்களின் இரத்தம்
சிந்தியது
1941 ஆம் ஆண்டு. உலகயுத்தம் மலாயாவின் வட
எல்லையிலிருந்து வெகு தொலைவில் இல்லை.
மலாயாவின் மூலப் பொருட்களுக்கு
ஐரோப்பாவில் ஏகப்பட்ட கிராக்கி. யுத்த தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கு
மலாயாவின் ரப்பரும், ஈயமும் பெருமளவில் தேவைப்பட்டன. “இங்கு ரப்பர் தொழில்
உற்பத்தியைப் பாதிக்கும் எவ்விதமான கீழறுப்புச் செயல்களுக்கும் எதிராகக்
கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தோட்ட முதலாளிகளுக்கு அரசாங்கம்
உறுதியளித்திருந்தது.
மலாயாவிலுள்ள தமிழர்கள் இந்திய தேசிய காங்கரசின்
ஏகாதிபத்திய போர் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குவதில்லை என்ற முடிவினை
பின்பற்றக்கூடும் என்று அஞ்சிய பிரிட்டீஷ் காலனித்துவ அலுவலகம் மலாயா
ரப்பரின் முக்கியத்துவத்தையும் அதன் உற்பத்தியை பாதிக்கும் எந்த
நடவடிக்கையும் தடுத்து நிறுத்த அவ்வலுவலகம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை
பிரிட்டீஷ் இந்திய அலுவலகத்திற்குக் கீழ்க்கண்டவாறு
தெரிவித்தது:
“இன்றைய சூழ்நிலையில், பாதுகாப்பு நோக்கில் மலாயா
ஒரு மிக முக்கியமான இடமாகும், உண்மையில், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அது
ஒரு கிழக்கு சுவராகத் திகழ்கிறது. அதன் கேந்திர முக்கியத்துவத்திற்கு
அப்பால், நமது போர் நடவடிக்கைகளுக்குத் தேவையான பொருளாதாரம் மற்றும்
அமெரிக்க டாலர் ஈட்டுவதற்கு அடித்தளமாக விளங்கும் ரப்பர் உற்பத்தியை
நிலைநிறுத்துவது மிக, மிக முக்கியமாகும். ஆகையால், நமது போருக்குத்
தேவையானவற்றை உற்பத்தி செய்வதில் நேரடியாகச் சம்பந்தப்படாத இடங்களில்
எடுக்கப்படும் நடவடிக்கைகள் போல் அல்லாமல், அங்கு (மலாயாவில்) உருவாகும்
ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டும்."
எந்த விலை கொடுத்தாவது, ரப்பர் உற்பத்தியை நிலை
நிறுத்த வேண்டும். ஏனென்றால், ரப்பருக்கு அவ்வளவு கிராக்கி இருந்தது.
இலண்டன் காலனித்துவ அலுவலகம் பிப்ரவரி மாதம் 1941 ஆம் ஆண்டு வெளியிட்ட
கீழ்க்காணும் அறிக்கை அதனை உறுதிப்படுத்தியது:“அமெரிக்கா 430,000 டன்
ரப்பரை எடுத்துக் கொள்கிறது..., 75,000 டன் ஈயத்தை வாங்குவதற்கு ஒப்புக்
கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களில் நாம் அறிந்து கொண்டது என்னவென்றால்
நாம் ஜூன் மாதம் 1942 ஆம் ஆண்டு வரையில் உற்பத்தி செய்யக் கூடிய எல்லா
ஈயத்தையும் இன்றைய நிலையில் வாங்கியுள்ள அவர்கள் (அமெரிக்கா)
விரும்புகிறார்கள்."
ரப்பருக்கு நல்ல கிராக்கி இருந்தது. நல்ல விலை
இருந்தது. ஆனால், போதுமான தொழிலாளர்கள் இல்லை. போர்த் தளவாட தொழில்களின்
அதிகரித்துக் கொண்டு போகும் மூலப் பொருட்களின் தேவைகளை இருக்கிற
தொழிலாளர்களை அடிமை-வேலை வாங்கி உற்பத்தியை பெருக்கினார்கள். எந்த நபராவது
ரப்பர் உற்பத்தியைச் சீர்குலைக்க முயன்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்
படும் என்று காலனித்துவ அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஐரோப்பிய போரில்
ஏகாதிபத்திய பிரிட்டனின் வெற்றி அல்லது
தோல்வி மலாயாவின் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை சார்ந்து
இருந்தது.
தங்களது உழைப்பிற்கு இவ்வளவு கிராக்கியைக்
கொண்டிருந்த தொழிலாளர்கள் சிறப்பான சலுகையைப் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், இந்திய தோட்டத் தொழிலாளர்களுக்கு அப்படி ஏதும்
நடக்கவில்லை. 1941 ஆம் ஆண்டில், சீன ஆண் பால்வெட்டு தொழிலாளிக்கு ஒரு நாள்
சம்பளம் 85 காசு. சில தோட்டங்கள் $1.20 காசு வரை ஒரு நாள் சம்பளமாகக்
கொடுத்தன. ஆனால், இந்திய ஆண் பால் வெட்டுத் தொழிலாளியின் ஒரு நாள் சம்பளம்
50 காசு மட்டுமே.
அமைதியான வேண்டுகோள்களின் (பிச்சை கேட்டதன்) பலனாகக்
காலனித்துவ முதலாளிகள் மிக மன எரிச்சலோடு 5 காசு சம்பள உயர்வல்ல, வாழ்க்கை
படிச் செலவு பிப்ரவரி மாதம் 1941 ஆம் ஆண்டிலிருந்து கொடுக்க முன் வந்தனர்.
இதன் மூலம் ஓர் இந்திய தோட்டத் தொழிலாளியின் தினச் சம்பளம் 55 காசிற்கு
உயர்ந்தது.
இந்த 5 காசு வாழ்க்கை படிச்செலவு அளித்ததற்குக் கை
மாறாக காலனித்துவ அரசு இந்தியா அல்லது ஜாவாவிலிருந்து தொழிலாளர் களைக்
கொண்டுவருதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று தோட்ட முதலாளிகள் கேட்டுக்
கொண்டனர். (இம்மாதிரியான சம்பவம் இப்போது நடந்து கொண்டிருப்பதை நாம் காண
முடிகிறதல்லவா?) மேலும், தோட்டங்களில் தோட்டத் தொழிலாளரின் “முன்னேற்ற”
மற்றும் “சீர்திருத்த' மன்றங்களின் நடவடிக்கைகளை அரசு கட்டுப்படுத்த
வேண்டும் என்றும் தோட்ட முதலாளிகள் கேட்டுக்
கொண்டனர்.