மலேசியத் தொழிற்சங்கப்
போராட்டத்தின் வரலாறு, அரசியல், சமூகவியல்
ஒரு கண்ணோட்டம்! -ஜீவி
காத்தையா
- எஸ்.எ.கணபதி தூக்கிலிடப்பட்டார்!
- பிரிட்டிஷ் பேரரசிற்காக மலாயாவைக் காப்பாற்ற அகில
மலாயா தொழிற்சங்க சம்மேளனம் தடை செய்யப்பட்டது!
பாகம் 1
ஐம்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு, 4.5.1949 ஆம் நாள்
அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவரான எஸ்.எ.கணபதி அன்றைய மலாயாவின்
ஆட்சியாளர்களான பிரிட்டிஷ்காரர்களால் கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில்
தூக்கிலிடப்பட்டார்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது
எஸ்.எ. கணபதிக்கு 24 வயதுதான் ஆகியிருந்தது. அவர் 1925ஆம் ஆண்டு பிறந்தவர்.
இவ்வளவு குறுகிய காலத்திலேயே மலாயா தொழிற் சங்க இயக்கத்தின் தேசிய தலைவரான
இவரின் சாதனை ஜவஹர்லால் நேருவின் கவனத்தை ஈர்த் திருந்தது.கணபதியைத்
தூக்கிலிருந்து காப்பாற்றுவ தற்காக ஜவஹர்லால் நேரு புதுடில்லியிலும்,
அவரின் சகாவான வி.கே.கே. கிருஷ்ணமேனன் இலண்டனி லும் முயற்சிகள்
மேற்கொண்டனர்.
அவர்களின் முயற்சி வெற்றி
பெறவில்லை. எஸ்.எ.கணபதியை தூக்கிலிட்டது பிரிட்டிஷ் மலாயா அரசின் மிக
மடத்தன மான செயல் என ஜவர்ஹலால் நேரு சாடினார். பிரிட்டிஷ் வல்லரசு யாருடைய
முறையீட்டிற்கும் செவி சாய்ப்பதில்லை. அதற்கு சவால் விடுபவர்களைத்
தூக்கிலிடப்பட வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும். அதுதான் பிரிட்டிஷ்
பேரரசின் கோட்பாடு.
பிரிட்டிஷ் பேரரசின் இத்தகைய செயல்
ஒன்றும் புதிதல்ல. மகாத்மா காந்தி கூட பகத் சிங்கை தூக்கு மேடையிலிருந்து
காப்பாற்ற பிரிட்டிஷ் அரசாங்கத்தை இணங்க வைப்பதில் தோல்வியே கண்டார். தனது
தீவிரவாத செயல்களின் மூலம் பகத் சிங் பிரிட்டிஷ் இந்திய அரசை நடுங்க
வைத்தார். எந்த விலை கொடுத்தும் பிரிட்டிஷாரை இந்தியாவிலிருந்து விரட்டுவதே
அவரது நோக்கம். தனது தாய் நாடான இந்தியாவை சுதந்திர நாடாக்குவதற்குத் தனது
உயிரையே விலையாக முன் வைத்தார். பகத் சிங் பிரிட்டிஷ் இந்திய அரசின் சட்டப்
பேரவையின் மைய அரங்கத்தினுள் வெடி குண்டு களை எறிந்து, ஆட்சியாளர் களைக்
கூப்பிட்டு தன்னைக் கைது செய்யும்படி கேட்டுக் கொண்டார். இந்த மாபெரும்
வீரர் கைது செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை
விதிக்கப்பட்டார்.
எஸ்.எ.கணபதியைப் போல, பகத் சிங்கும்
இளமையிலேயே 23.3.1931இல் தூக்கு மேடை ஏறியபோது அவரின் வயது 23தான்.
இம்மாவீரர் பகத் சிங்கை இந்தியர்கள் எவரும் மறந்து விடவில்லை. கடந்த
23.3.2005 அன்று பகத் சிங் தூக்கிலிடப்பட்ட 74ஆம் ஆண்டின் நினைவுநாளை
அவர்கள் கடைப் பிடித்தனர். 23.03.2003 அன்று இந்திய அதிபர் அப்துல் கலாம்
பகத் சிங்கின் கல்லறையின் முன் தமது மரியாதையைச் செலுத்தினார். ஆனால்,
எஸ்.எ.கணபதியின் தியாகத்தைப் பொறுத்தவரையில் மலேசியர்கள் இந்தியர்களைப்
போல் உணர்வுடன் நடந்து கொள்ளவில்லை.
நாட்டின் சுதந்திரத்திற்காகப்
போராடிய வீரர்களை, குறிப்பாக உண்மையான போராட்ட வீரர்களை, நினைவுகூர்ந்து,
மதித்துப் போற்ற வேண்டியது மலேசிய மக்களின் கடமையாகும். அவர்களால்,
அவர்களின் போராட்டங்களால், அவர்களின் மரணத்தினால் நாம் ஆங்கிலேயர்களின்
அடிமைப் பிடியிலிருந்து மீண்டுள்ளோம். இவர்களை நினைவுகூருவது
அவசியமானதாகும். எனென்றால், நம்மை அடிமையாக்க வேறு பல சக்திகள்
செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
எஸ்.எ. கணபதி ஊக்கமுடையவராக,
செயல்படும் திறன் மிக்கவராக, ஈடுபாடு கொண்டவராக இருந்திருக்க வேண்டும்.
இப்பண்புகளே அவரை மலாயாவின் வலிமை மிக்க அகில மலாயா தொழிற்சங்க
சம்மேளனத்தின் தலைமைத்துவத்திற்கு இட்டுச் சென்றன. இவை அனைத்தும் இவரது
24ஆம் வயதிலேயே தூக்கு மேடைக்கு முன் முற்றுப் பெற்றன.
சிங்கப்பூரில் இயங்கிய அஜாத் ஹிந்த்
பள்ளியில் இந்திய தேசிய ராணுவ (INA) போதகராக இருந்தார். மேலும் மலாயா
கம்யூனிஸ்ட் கட்சியின் (MCP) கட்டுப்பாட்டிலோ அல்லது செல்வாக்கிலோ
செயல்பட்டு வந்த “முன்னணி” இதழின் ஆசிரியராகவும் இருந்தார்.தமது 22வது
வயதில் அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரானார். இச்சங்கம்
பின்னர் அகில மலாயா தொழிலாளர் சம்மேளனம் என பெயர் மாற்றம் கண்டது.
ஜவர்ஹலால் நேருவின் தலைமையில் புதுடில்லியில் நடந்தேறிய ஆசிய
நாடுகளுக்கிடையிலான நட்புறவு மாநாட்டில் மலேசியப் பேராளர்களில் ஒருவராக
கலந்து கொண்டார்.
1948ஆம் ஆண்டு மலாயா இனங்கள் விடுதலைப்
படையில் இணைந்தார். எஸ்.ஏ. கணபதியினால் வழிநடத்தப்பட்ட அகில மலாயா
தொழிற்சங்க சம்மேளனம் மலாயாவின் உழைக்கும் வருக்கத்தினரின்
உரிமைகளுக்காகவும், மலாயாவின் அரசியல் சுதந்திரத்திற்காகவும் நடத்திய
மாபெரும் போராட்ட வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஜப்பானியர்கள் மலாயாவைப் பிடிப்பதற்கு
முன்பு
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி
இருபத்தைந்து ஆண்டுகளில் பல தொழிலாளர் இயக்கங்கள் தோன்றின. அவை யாவும்
தொழிற்சங்க பணிகளைச் செய்தன. ஆனால் அவையாவும் தொழிற்சங்கங்கள்
என்றழைக்கப்பட்டவில்லை. அவை வ
ெளிப்படையாகச் செயல்பட முடியவில்லை. இதற்குக் காரணம்
மலாயா, சிங்கப்பூர் அரசாங்கங்கள் கொண்டிருந்த “தொழிற்சங்க தத்துவத்தை
கருவிலேயே அழித்துவிட வேண்டும்” என்ற கொள்கைதான். இக்கொள்கையின் காரணமாக
இத்தொழிலாளர் அமைப்புகள் இரகசியமாகச் செயல்பட தொடங்கின. இவற்றை
முதலாளிகளும், அரசு அதிகாரிகளும் ‘இரகசிய சங்கங்கள்’ என்று
பறைசாற்றினர்.
இருப்பினும், 1889 ஆம் ஆண்டு
சிங்கப்பூரிலும் 1895 ஆம் ஆண்டு மலாயாவிலும் சில தொழிலாளர் இயக்கங்கள்
மேலாணை அமைப்பு விதிகளின் (Societies Ordinance) கீழ் பதிவு பெற்ற
அமைப்புகளாக மாற்றம் கண்டன. இவ்வமைப்புகள் பெரும்பாலும் இயந்திர
வல்லுநர்களைப் போன்ற திறன்மிக்க சீனத் தொழிலாளர்களுக்காகவே இயங்கின. இந்திய
தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர் அமைப்புகள் பின்னரே
தோன்றின.
மலாயாவிலிருந்த ஐரோப்பிய முதலாளிகளை
அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஆரம்பக்கால வேலை நிறுத்தங்களில் முக்கியமானது, 1912
ஆம் ஆண்டு கோலாலம்பூர் பகுதியிலிருந்த தோட்டத் தொழிலாளர்களின் வேலை
நிறுத்தமாகும்! வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் கோரிக்கைகள்
ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால் தாங்கள் கூலிகளால் கட்டளை யிடப்பட்டதைத்தான்
அவர்களால் நம்ப முடியவில்லை. பெடரல் சட்ட அவையின் (Federal Legislative
Council (FLC)) முதலாளிகளின் பிரதிநிதியாக இருந்த எச்.டி. கிரிபித்ஸ் (H.D.
Griffiths) 1912இல் சட்ட அவையில் பேசும்போது, ‘சில இரகசிய சங்கங்களின்
உத்தரவின்படி செயல்படும் கூலிகள் இடும் கட்டளைக்கு ஓர் ஐரோப்பியர் விட்டுக்
கொடுத்து பணிந்து போக வேண்டும் என்றால், இந்த விவகாரம் கடுமையானதாகக்
கருதப்பட வேண்டும்,” என்று கூறினார்.
முதலாளிகளின் கணிப்பு அன்று, ஏன்
இன்றும் கூட, என்னவென்றால் தாழ்ந்த நிலையிலிருக்கும் ஒரு தொழிலாளி தன் சுய
சிந்தனை அடிப்படையில் தனது முதலாளிக்கு எதிராக வேலை நிறுத்தம் போன்ற
செயல்களில் ஈடுபடமாட்டான், அல்லது காய்ந்து போன ரப்பர் மரத்தை விறகிற்காக
வெட்டியதற்குத் தன்னை 1978இல் அடித்து உதைத்த செராஸ் தோட்ட நிர்வாகியை
வழிமறித்து வேதம்பாளின் மகன் ராஜேந்திரன் தன் சுய சிந்தனையின் அடிப்படையில்
தாக்க மாட்டான், என்பதாகும்.
1920 ஆம் ஆண்டுகளில் கல்வி,
மலாயாவின் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்ட நிலை, சீன தேசியவாதிகளின்
போராட்டத்தின் தாக்கம், சிங்கப்பூருக்கு வந்த கம்யூனிஸ்டுகளுடன் இடதுசாரி
களின் ஈடுபாடு, 1925 ஆம் ஆண்டு முதன் முதலில் தோற்றம் கண்ட நன்யாங்
(Nanyang) அல்லது தென் கடல்கள் (SOUTH SEAS) பொதுத் தொழிலா ளர்கள் சங்கம்
(Nanyang or South Seas General Labour Unions (GLU)) ஆகியவை தொழிலாளர்
அமைப்புகளின் எண்ணிக்கை கூடுவதற்கும், வேலை நிறுத்தங்கள் நடந்ததிற்கும்
காரணங் களாக அமைந்தன.
1927 ஆம் ஆண்டு சிங்கப்பூரில்
நன்யாங் பொதுத் தொழிலாளர் சங்கம் தனக்கு கீழ் 42 மலாயா தொழிலாளர்
அமைப்புகள் இணைந்துள்ளதாகவும், அவற்றில் 5000 அங்கத்தினர்கள் இருப்பதாகவும்
கூறியது.
1926 ஆம் ஆண்டிற்கும் 1927 ஆம்
ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் சீன பட்டறைத் தொழிலாளர்களும் சிங்கப்பூர்
டிரேக்ஷன் கம்பனி (Singapore Traction Company) தொழிலாளர்களும் பல வேலை
நிறுத்தங்களில் ஈடுபட்டிருந்தனர். 1928 ஆம் ஆண்டு சிங்கப்பூர் காலணி
உற்பத்தி தொழிலாளர்களும் இன்னும் வேறுபட்ட தொழில்களில் ஈடுபட்டிருந்த
தொழிலாளர்களும் ஒரு பெரும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இவை
போன்ற நடவடிக்கைகள் மலாயாவிலும் நிகழ்ந்தன. 1930களின் இறுதி இரண்டு
ஆண்டுகளில் தோட்ட சிப்பந்திகள், அரசு ஊழியர்கள், அரசு சம்பந்தப்பட்ட பல
இலாகாவில் பணிபுரிந்த தொழிலாளர்கள், துறைமுகத் தொழிலாளர்கள், தங்களது
தொழிலாளர் அமைப்புகளை நிறுவினர். 1929ஆம் ஆண்டு கிந்தா ஈயச்சுரங்கப்
பகுதிகளில் இயங்கிய தொழிலாளர் அமைப்புகள் 11,589 சாதாரணத் தொழிலாளர்களை
அங்கத்தினராக கொண்டிருந்தன.
தொழிலாளர்கள், அவர்களின்
அமைப்புகள், குறிப்பாக இடச்சாரி சார்புடையவர்கள் மற்றும் நன்யாங் பொதுத்
தொழிலாளர் சங்கங்கள், அதிகரித்து வரும் நடவடிக்கைகளை மலாயாவின் காலனித்துவ
அரசாங்கம் அச்சத்துடன் கண்காணித்து வந்தது. தேவைப்பட்டால், இவ்வமைப்புகளை
“இரகசிய சங்கங்களாக” கருதும்படி காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.
இக்காலகட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இயங்கிய பொதுத்
தொழிலாளர்கள் சங்கங்களின் நடவடிக்கைகள் மிக விரிவான அளவில் இருக்கவில்லை.
இருப்பினும் 1928-31 ஆம் ஆண்டுகளில் காவல் துறையினரால் இச்சங்கங்கள்
முற்றாக ஒழிக்கப்பட்டன.
இங்கு குறிப்பிடத்தக்க நிகழ்வு
ஒன்று என்னவென்றால் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் 1926 ஆம் ஆண்டு பிரிட்டனில்
தொடங்கிய பிரிட்டிஷ் பொது வேலை நிறுத்தம் அது தொடங்கிய பத்தே நாட்களில்
தோல்வியில் முடிந்தது. அதற்குக் காரணம் பிரிட்டிஷ் தொழிற்சங்கங்களின்
தலையாய அமைப்பான பிரிட்டிஷ் தொழிற்சங்கக் காங்கிரஸ் (British Trades Union
Congress (BTUC)) பொது வேலை நிறுத்தத்திற்கான தனது ஆதரவை தொடர
மறுத்ததுதான். ஆனால், மலாயாவில் காலனித்துவ அரசு தனது முழு பலத்தையும்
பாவித்து தொழிலாளர்களின் போராட்டத்தை ஒழித்துக் கட்டும் வரையில்
தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்தது.
இந்தியர்கள் இந்நாட்டிற்கு
கூலிகளாகக் கொண்டுவரப்பட்டமுறை, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பெருங்
காட்டுப்பகுதிகளில் வேலை செய்து வாழ்ந்து வந்த சூழ்நிலை, மேலும்
அவர்களுக்கிடையே நிலவிய சமூகப் பிரச்சனைகள், அவர்கள் ஒன்றிணைந்து
செயல்படுவதற்கு சாதகமாக அமையவில்லை. அதனால் தங்கள் உழைப்பை சுரண்டி,
கொடுமைப்படுத்திய காலனித்துவ முதலாளிகளை எதிர்க்க இயலாது
போயிற்று.
இருப்பினும், அந்த நிலையில் மாற்றம் காணத் தொடங்கியது.
இந்தியாவிலிருந்து இங்கு வந்த மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், இதழாளர்கள்
போன்ற தொழில் வல்லுநர்கள், மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர்கள், வியாபாரிகள்
மூலம் பரவிய இந்திய தேசியப் போராட்டத்தின் தாக்கம் இங்கு முதுகெலும்பற்று
வாழ்ந்து வந்த இந்திய தொழிலாளர்களை எழுந்து நிற்க வைத்து அவர்களின்
புரட்சிப் பயணத்தைத் தொடர்வதற்கான சூழ்நிலையை உருவாக்கியது.
கொடுமை நிறைந்த அந்த நெடுந்தூர
புரட்சிப் பயணம் 1930களில் தொடங்கியது. தனிநபர்களும் அமைப்புகளும் இந்திய
தொழிலாளர்களின் உரிமைகள், இந்தியர்களின் நிலைப்பாடுகள் ஆகியவற்றை
உயர்த்துவதற்கான போராட்டங்களை முன் நின்று நடத்துவதற்கு அன்றைய கெடுபிடி
சூழ்நிலையில் மிகக் கடுமையாக உழைத்தார்கள். அன்று ஏற்பட்ட பொருளாதார
வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட ரப்பர் தொழில் இந்தியத் தொழிலாளர்கள் எவ்வளவு
மோசமாக நடத்தப்படுகிறார்கள், இந்நாட்டில் அவர்களின் பொருளாதார ஈடுபாடு எந்த
நிலையில் இருந்தது என்பதைக் கண்கூடாகக் காட்டியது. 1930-1933ம்
ஆண்டுகளுக்கிடையில் 180,000க்கும் மேற்பட்ட வேலையில்லாத இந்தியத்
தொழிலாளர்கள் இந்தியாவிற்குத் திரும்ப அனுப்பப்பட்டனர். அவர்களில்
பெரும்பாலானோர் வெறும் “எலும்புமூட்டைகள்”. இந்தப் பொருளாதார வீழ்ச்சி
“மலாயாவிற்கு தொழிலாளர்கள் அனுப்பப்படுகின்ற முறை இந்தியர்களுக்குப்
பேரழிவானது என்பதை தெளிவாக காட்டியது” என்று கூறப்பட்டது. இந்நாட்டிற்குக்
கொண்டு வரப்படுகின்ற தொழிலாளர்கள் எந்த ஒரு நிரந்தர உரிமையும் பெற
அனுமதிக்கப்படாத நிலையில் அவர்களை இங்குக் கொண்டுவதற்கு உதவுவதோ அல்லது
ஊக்கப்படுத்துவதோ தவறு என்ற கருத்திற்கு ஆதரவு பெருக ஆரம்பித்தது.
இறுதியில், 1938ம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுதியான
வேண்டுகோளை ஏற்று மலாயாவிற்கு உடலுழைப்புத் தொழிலாளர்களை ஒப்பந்த முறையில்
அனுப்புவதை இந்திய அரசு தடை செய்தது. இதன் நோக்கம் மலாயாவில் வேலை செய்யும்
இந்தியத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதாகும். தொழிலாளி
இல்லையென்றால் முதலாளியும் இல்லை, பேரரசும் இல்லை.
மே- ஜூன் 1937ல் ஜவஹர்லால் நேரு
மலாயாவில் சுற்றுப் பிரயாணம் செய்தார். அதனைத் தொடர்ந்து தான் மலாயாவிற்கு
உடலுழைப்புத் தொழிலாளர்களை ஒப்பந்த முறையில் அனுப்புவதற்கு இந்திய அரசு தடை
விதித்தது. செப்டம்பர் 1936இல் தோற்றுவிக்கப்பட்ட மலாயா மத்திய இந்தியர்கள்
சங்கத்தின் (Central Indian Association of Malaya (CIAM) கொள்கைகளுக்கு
நேரு தனது தீவிர ஆதரவை தெரிவித்தார். இச்சங்கத்தின் அரசியல் நோக்கங்கள்
மலாயாவிலுள்ள இந்தியத் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தும்படி கேட்டுக்
கொண்டார். தொழிலாளர்களுக்கு, தொழிற்சங்கங்கள் தேவை என்று வாதிட்டார். சீனத்
தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளத்திற்குச் சமமான சம்பளம் இந்தியத்
தொழிலாளர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்றார். அதோடு, இந்தியர்களுக்கு
கல்வி கற்பதற்கு வசதியும், கள் குடிப்பதனால் ஏற்படும் அழிவிலிருந்து
பாதுகாப்பும் கொடுக்க வேண்டுமென்றார். ஏன் இந்நாட்டில் பிறந்த
இந்தியர்களும், இந்நாட்டில் வாழ்கின்ற இந்தியர்களும், இந்நாட்டு
மைந்தர்களாகக் கருதப்பட்டு முழு குடியுரிமை வழங்கக் கூடாது? எனவும்
வினவினார்.
நேருவின் இந்தப் பயணத்திற்குப்
பிறகு, பின் நோக்குதல் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று மைக்கல் ஸ்டென்சன்
கூறுகிறார். குன்ஸ்ரு மற்றும் எ.கே.கோபாலன் போன்ற இந்திய தலைவர்கள்
இந்நாட்டிற்கு வந்தார்கள். அவர்களின் வரவு இங்குள்ள சிப்பந்திகள் மற்றும்
நகர்ப்புறத் தொழிலாளர்கள் மத்தியில் தேசிய உணர்வை வலுப்படுத்தியது. இதன்
காரணமாகப் புதிய அமைப்புகள் உருவாகின. இவற்றை வழி நடத்தியவர்கள் ஆங்கிலம்
மட்டும் கற்றவர்களாக இல்லாமல் தமிழும் ஆங்கிலமும் கற்ற கீழ்நிலை நிர்வாக
மற்றும் தொழில் வல்லுநர்களாக இருந்தார்கள். இவ்வமைப்புகளில் பெரும்பாலான
அங்கத்தினர்கள் தொழிலாளர்கள். இவ்வாறு தொழிலாளர்கள் முன்னிலையடையும்
சூழ்நிலை உருவாகிக் கொண்டிருந்தது. 1937ம் ஆண்டில் மலாயா மத்திய
இந்தியர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் எ.எம்.சூசை இந்திய சமுதாயம்
முழுவதும் உயர்ந்த நிலையடைவதற்கான திறவுகோல் இந்தியத் தொழிலாளர்களின்
நிலையை உயர்த்துவதுதான் என்று வலியுறுத்தினார்.
வேலை நிறுத்த அலை
இக்காலகட்டத்தில், தொழிலாளர்கள்,
குறிப்பாகச் சீனத் தொழிலாளர்கள் மற்றும் இந்தியத் தொழிலாளர்கள், தங்களின்
கோரிக்கையை வெற்றிகரமாக்குவதற்கு ஒருமுனை படுத்தப்பட்ட செயல்கள் எந்த
அளவிற்குத் துணை நிற்கும் என்பதைக் கண்டு அறிந்திருந்தனர்.
1933-1936ஆம் ஆண்டுகளுக்கிடையில்
தொழில் துறை முன்னேற்றம் கண்டது. ரப்பரின் விலை 250 விழுக்காட்டு உயர்வு
கண்டது. அவ்வாறே ஈயத்தின் விலையும் பெருமளவில் உயர்ந்தது. வாழ்க்கைச்
செலவுகளும் உயர்வு கண்டன. இவற்றின் விளைவாகத் தொழிலாளர்களும் சம்பள உயர்வு
கோரினர். அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப் படாதபோது, திறன்மிக்க
தொழிலாளர்களான தையல்கார்கள், முடிதிருத்துபவர்கள், சூளைத் தொழிலாளர்கள்,
நகை செய்பவர்கள், கட்டடத் தொழிலாளர்கள், தச்சர்கள், அச்சடிப்பவர்கள்,
பிணப்பெட்டி செய்பவர்கள், பொறியியல் தொழிலாளர்கள், சுருட்டு செய்யும்
தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்கள் போன்றோர் வேலை நிறுத்தத்தில்
ஈடுபட்டனர். நன்கு ஒருமுகப்படுத்தப்பட்ட இவ்வேலை நிறுத்தங்கள் சுமுகமாகத்
தீர்க்கப்பட்டன.
இரண்டாவது வேலை நிறுத்த அலை
செப்டம்பர் 1936ல் தொடங்கி 1937ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிவரை நாடு
முழுவதும் பரவியிருந்தது. இந்த வேலை நிறுத்தத்தில் திறன் மிக்கத்
தொழிலாளர்களும் உடலுழைப்புத் தொழிலாளர்களும் ஈடுபட்டி ருந்தனர்.
சிங்கப்பூர், ஜோகூர் ஆகிய இடங்களில் இயங்கிய அன்னாசிப்பழத்
தொழிற்சாலையிலுள்ள பழவெட்டும் தொழிலாளர்கள் முடுக்கிவிட்ட இவ்வேலை
நிறுத்தம், கட்டட தொழிலாளர்கள், சிங்கப்பூர் டிரேக்சன் கம்பெனி பல்லினத்
தொழிலாளர்கள் மற்றும் சிங்கப்பூர் மாநகரத் தொழிலாளர்கள் வரை பரவியது. ஆக
மொத்தம் 30,000 தொழிலாளர்கள் இவ்வேல நிறுத்தத்தில்
ஈடுபட்டிருந்தனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் பத்து ஆராங்
நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள், ஹோங் ப்பாட் ஈயச் சுரங்கத் தொழிலாளர்கள்
வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள். நாட்டின் பல பாகங்களில் சீனப் பட்டறைத்
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். கிள்ளானிலுள்ள ரப்பர்
தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தம் செய்யப்பட்டது. பின்னர், 10,000திற்கும்
மேற்பட்ட சீனப் பால்வெட்டுத் தொழிலாளர்கள் தென் சிலாங்கூர், நெகிரி
செம்பிலான், மலாக்கா, வட ஜோகூர் மற்றும் பகாங்கின் சில பகுதிகளில்
வேலைநிறுத்தம் செய்தனர். பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களும்
கிள்ளான் தொழிற்சாலைத் தொழிலாளர்களும் இறுதியாக நடத்திய அனுதாப
வேலைநிறுத்தத்துடன் இந்த இரண்டாவது வேலைநிறுத்த அலை அதன் உச்சக்கட்டத்தை
அடைந்தது.
அன்று அமுலிலிருந்த தொழில்
முறைக்குத் தொழிலாளர்கள் விடுத்த வரலாறு காணாத சவால் பற்றி
குறிப்பிடுகையில் போலீஸ் படையின் தலைமை அதிகாரி (Inspector General of
Police) ஒருங்கிணைந்த மலாய் மாநிலங்களின் (The Federated Malay States)
சரித்திரம் கண்ட மிகக் கடுமையான ஆபத்து என்று வர்ணித்தார். பத்து ஆராங்கில்
நடந்த வேலைநிறுத்தம் அரசாங்கத்திற்கும், மலாயா கம்யூனிஸ்ட் கட்சிக்கும்
இடையில் நடந்த பலப்பரிட்சை என்றும், அதற்குத் தங்களிடம் போதுமான சான்றுகள்
இருப்பதாகவும் அந்த போலீஸ் அதிகாரி கூறிக்கொண்டார்.