Home | About Us | Services | Press | Education | Discussion Forum | SPM & STPM Leavers | Career | Links | Contact Us

 

மெர்டேகா (விடுதலை) 

மலேசிய விடுதலை நாள் ( 50 ஆண்டுகள்) சிறப்புக் கட்டுரை

முனைவர் ஆறு. நாகப்பன்

 

நியாயப்படி மூன்று முறை முழங்க வேண்டும். அப்படித்தான் 1957, ஆகஸ்டு 31ஆம் தேதி துங்கு அப்துல் ரஹ்மான் கற்றுக் கொடுத்தார். ஆனால், என்ன செய்வது, ஐம்பது ஆண்டுக் காலத்தில் உடம்பில் உள்ள சத்தெல்லாம் தீர்ந்து போய்விட்டதால் ஒரு முறைதான் சொல்ல முடிகிறது. அதுவும் சொல்லத்தான் முடிகிறது. முழங்க முடியவில்லை!

எழுபது வயது கிழவி மஞ்சள் அரைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த பேரன் கேட்டானாம், ‘என்ன பாட்டி விசேஷம்ணு. ‘பழைய நெனப் புடா பேராண்டி..." என்று பாட்டி சொன்னாளாம். அந்த மாதிரி எனக்கும் ஒவ்வொரு ஆகஸ்டு 31க் கும் பழைய நினைப்பு வந்துவிடுகிறது! பேரன்கள் சலித்துக் கொள்ளாமல் இதைப் படிக்க வேண்டும்.

அப்போது எனக்குப் பதின்மூன்று வயது. கெர்பி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆறாம் வகுப்புத் தேர்வு எழுதிவிட்டு (யு.பி.எஸ்.ஆர். அல்ல) சிரம்பான், ஜாவா லேன் தமிழ்ப்பள்ளி யில் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். பள்ளிக்கு முன்னால் இருந்த பவுல் தெருவில் தேவி ஸ்டோர் என்று மளிகைக் கடை ஒன்று இருந்தது. அதன் ஒரு பகுதி புத்தகக் கடையாக இருந்தது. அதில்தான் ஏழாம் வகுப்புக்கான புத்தகங்கள் வாங்கினோம். ராமானுஜம் என்று நினைக்கிறேன், அவர் எழுதிய அறிவு விளக்க வாசகம், இந்து தேச சரித்திரம், மலாயா கணிதம் இன்னும் பூமிநூல், சுகாதாரம், அறிவியல் நூல்களோடு நோட்டுப் புத்தகங்களும் தேவி ஸ்டோரில் கிடைத்தன. அந்தக் கடை வரிசையின் கடைசியில் கல்சா என்ற சீக்கியர் கோயில் இருந்தது. இடையில் ஓர் ஒற்றையடிப் பாதையில் பள்ளிக்குப் போக வேண்டும். அப்போதெல்லாம் கடைக்குப் பின் பக்கமிருந்து முடைநாற்றம் ஒன்று வரும். விசாரித்தபோது ‘செண்டுல்' செய்கிறார்கள் என்று நண்பர் அருணாசலம் சொன்னார் (அவர்தான் பின்னாளில் மலாக்கா மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த டத்தோ அருணாசலம்) ஒவ்வொரு நாளும் செண்டுல் ‘வாசனையைக் கடந்து போனதால் செண்டுல் எனக்கு ஆகாத பொருளாய்ப் போனது.


இப்படியான ஒரு நாளில்தான் எங்கள் வீட்டு பிலிப்ஸ் வானொலியில் மெர்டேகா முழக்கத்தைக் கேட்டேன். நீலாயில் ஒரு முடி திருத்தகத்தில் வழக்கமாக வரும் பத்திரிகை அதிக பக்கங்களோடு மெர்டேகா சிறப்பிதழ் என்று வந்தது. சுதந்தரம் பற்றி நிறைய கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எல்லாம் இருந்தன. அதற்குப் பிறகு ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு 31இல் மெர்டேகா சிறப்பிதழ்களை நமது ஏடுகள் வெளியிட்டு வருகின்றன. மலாய்ப் பத்திரிகைகள் கூட சிறப்பு இதழ்கள் போடுவதை நான் பார்க்கவில்லை. அது மட்டுமன்று, நாடு முழுவதும் கவியரங் குகள் நடப்பதாகவும் செய்திகள் வந்தன. எழு பது, எண்பதாம் ஆண்டு களில் நான்கூட சில மெர்டேகா கவியரங்குகளில் கவிதை பாடியிருக்கின்றேன். தமிழ் எழுத்தாளர்களுக்கு மட்டும் நாட்டுப்பற்று கொஞ்சம் அதிகம் என்று தெரிகிறது.

1959 என்று நினைக் கிறேன். பத்திரிகைகளில் தேர்தல் பற்றிய செய்திகள் பரபரப்பாக வெளிவரத் தொடங்கின. துங்கு அப்துல் ரஹ்மான் சுதந்தரத் தந்தை என்று போற்றப்பட்டார். வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பாவில் உயரமாகக் காட்சியளித்த துன் வி.தி. சம்பந்தன், அழகான மூக்குக்கண்ணாடி போட்டிருந்த துன் டான் சியூ சின் ஆகிய மூவரும் சேர்ந்து காட்சியளிக்கும் சுவரொட்டிகள் எல்லா இடங்களிலும் காட்சியளித்தன. பாய்மரக்கப்பல் கூட்டணி கட்சிகளின் சின்னமாய் இருந்தது. ஊசிக்கப்பல் என்ற ராக்கெட் ஜனநாயகச் செயல் கட்சிக்கும் மாட்டுக்கொம்பு சோசியலிச கட்சிக்கும் சின்னங்களாய் ஒட்டப்பட்டன. இரவு மணி ஏழுக்கெல்லாம் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் காதைப் பிய்க்கும். விளையாட்டுத் திடல்களில் பெரிய ‘லாரி'யை நிறுத்தி மூன்று பக்கக் கதவுகளையும் திறந்து திடீர் மேடைகளை உருவாக்கி மேலே ஒலிபெருக்கி வைத்துப் பேசுவார்கள். பனி கொட்டும் திடலில் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு ராக்கெட்டு, மாட்டுக்கொம்பு உரைகளைக் கேட்போம். நீங்கள் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்று அப்பாவையும் அம்மாவையும் கேட்டபோது கப்பலுக்குத்தான் போட்டோம் என்றார்கள்.


பத்திரிகைகளில் தேர்தல் செய்திகளோடு எதிர்காலத் திட்டங்களும் பேசப்பட்டன. கிராம அபிவிருத்தி திட்டங்கள் பற்றிப் புதிய பிரதமர் துன் அப்துல் ரசாக் விடுத்த அறிக்கைகள் நிறைய வந்தன. மஜ்லிஸ் அமானா ராக்யாட் என்ற மாரா நிறுவனம் ஆறாம் வகுப்புத் தேறிய மலாய் மாணவர்களுக்கு அதி நவீன விடுதிகளுடன் கூடிய கல்லூரிகள் அமைக்கிற செய்திகளும் அப்போதுதான் வெளிவந்தன.

அதே சமயத்தில் தமிழில் இருந்த ஏழாம் வகுப்பு ஐம்பத்தெட்டோடு நிறுத்தப்பட்டது. தமிழ்ப்பள்ளிக் கல்விக்குப் பின் இடைநிலைக் கல்வி பெற முடியாத நிலையில் இருந்த பலர் தோட்டப்புறங்களுக்குத் திரும்பித் தம் ‘குலத்தொழிலில்' ஈடுபட்டனர். தோட்டப்புறங்களில் கல்வியும் பொருளாதாரமும் இப்படியிருக்க நகர்ப்புறங்களில் கீழ்நிலைத் தொழிலாளராக இருந்த தமிழர்கள் நிலையும் மீசையை முறுக்கிக் கொள்வதாக இல்லை. இருந்தாலும் வசதியுடைய மிகச் சிறிய அளவிலான தமிழர்களில் சிலர் வேறு விதமாக இருந்தனர்.

தமிழ்ப்பள்ளிகள் தோட்டப் பாட்டாளிகளை மட்டுமே உருவாக்க முடியும்" என்று ஆங்கிலம் படித்த இவர்கள் சொல்லிக்கொண்டிருந்தனர். 1965இல் பெட்டாலிங் ஜெயா தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மண்டபத்தில் ஒரு தமிழ்க்கல்விக் கருத்தரங்கு நடந்தது. அப்போது தற்காலிகத் தமிழாசிரியனாக இருந்த நான் அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டேன். மலாயாப் பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர் இராம சுப்பையா, டாக்டர் த. மாரிமுத்து (இப்போது ம.இ.கா.வின் கல்விப்பிரிவுத் தலைவர்) அந்தக் கருத்தரங்கில் பேசும்போது ‘தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும் முடிவிட வேண்டும் என்றும் தமிழ்ப் பிள்ளைகள் எல்லாரும் ஆங்கிலப் பள்ளிக்குப் போக வேண்டும்' என்றும் கூறினர்.

இதைக்கேட்ட தமிழாசிரியர் ஒருவர் (தம்பாய் முனியாண்டி என்று நினைக்கிறேன்) உடனே எழுந்து “தமிழ்ப்பள்ளிகளை மூடினால் தீக்குளிப்பேன்' என்று முழங்கினார். கூட்டத்தில் எல்லாரும் பல்கலைக் கழகப் பேராசிரியர்களைக் கண்டித்துக் குரல் எழுப்பினர். உடனே, டாக்டர் இராம சுப்பையா “ஆங்கிலப் பள்ளிகளில் தமிழ் மாணவர்களுக்குத் தாய்மொழியைக் கட்டாயப் பாடமாக்க அரசாங்கத்தைக் கேட்கலாம்' என்று கூற, அதற்கும் அவையினர் ஒப்புக்கொள்ளாத நிலையில் வழக்கமான ஆரவாரத்தோடு கூட்டம் முடிந்தது.

தமிழ்ப்பள்ளிகளுக்காகத் தொடர்ந்து போராடி வந்த தமிழாசிரியர்கள் ஏழாம் வகுப்பு (ஆசிரியர் ஆயத்த வகுப்பு) தேறியவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி தர வேண்டும் என்று வற்புறுத்தினர். அவர்களில் சு.வை. லிங்கம் என்பவர் ‘பெடரல் ஹவுஸ்' (இன்றைய டாய பூமி கட்டடத்திற்கு எதிர்ப்புறம்) முன்னால் 1967இல் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது ம.இ.கா.வின் தலைவராக இருந்த துன் வீ.தி.சம்பந்தன் “ஏற்பாடு செய்கிறேன்' என்று வாக்களித்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். ஆனால் அந்த ஆண்டு தொடங் கப்பட்ட விடுமுறைக்கால ஆசிரியர் பயிற்சிக்கு எல்.சி.இ. தேறியவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் பட்டனர். உண்ணாவிரதம் இருந்த வருக்கே இடம் கிடைக்கவில்லை.

1967இல் தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குப் போனபோதுதான் மலாய்க்காரர்களில் மேட்டுக்குடி மக்களுக்காகவே நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் சகல வசதிகளும் கொண்ட மலாய்க் கல்லூரிகள் இருப்பதை நான் அறிந்தேன். 57க்குப் பின் நாட்டுப்புற மலாய்க்காரர்களும் இது போன்ற விடுதியுடன் கூடிய கல்லூரிகளில் சேர ஆரம்பித்தனர். உயர்ந்த அரசுப் பணிகளுக்கான இடங்களை நிரப்புகின்ற ஆற்றலும் அறிவும் உடைய மலாய்க்காரர்களை உருவாக்குவதில் இந்தக் கல்லூரிகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன. (தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெட்டாலிங் ஜெயாவில் அமைந்திருந்த இந்தியர்களுக்கான ஒரே ஒரு மாணவர் விடுதியும் இப்போது இல்லை என்பது உங்கள் நினைவுக்கு வருகிறதா?)

1969 மே 11இல் நடந்த தேர்தல் விடுதலைக்குப் பிந்திய மலேசிய வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற, சட்டமன்ற இடங்களில் கூடுதலானச் சில இடங்கள் பெற்று அதனால் நடந்த வெற்றிவிழா ஊர்வலம் பெரிய இனக்கலவரத்தில் முடிந்தது. மே 13 கறுப்பு நாள் எனக் குறியிடப்பட்டது. அதற்குப் பிறகு வரையப்பெற்ற புதிய பொருளாதாரக் கொள்கை பூமிபுத்ராக்களை மையப்படுத்திய பிரதமர் துன் அப்துல் ரசாக்கின் தொலை நோக்குச் சிந்தனையாக இருந்தது. இனப்பாகுபாடற்ற வறுமை ஒழிப்பு என்பதை இலட்சிய நோக்காகக் கொண்டிருந்தாலும் தோட்டப் புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வாழ்ந்த தமிழர்களின் பக்கம் இந்தத் திட்டம் திரும்பவே இல்லை.

கறுப்பு நாளுக்குப் பிறகு தோட்டப் பாட்டாளிகளில் குடியுரிமை பெற்றி ராத பலர் வேலை அனுமதிக்கு (பெர்மிட்) விண்ணப்பிக்க வேண்டும் என்ற சட்டம் வந்தது. தோட்டப்புறத்தை மட்டுமே முற்றிலும் சார்ந்திருந்த இவர்கள் குடியுரிமை பெறுவதற்குரிய மலாய் மொழி அறிவைப் பெறாத நிலையில் குடியுரிமை இல்லாத வேலையற்றோர் ஆயினர். இந்த நிலையிலும் என் அப்பாவும் அம்மாவும் கப்பலுக்குத் தான் ஓட்டுப் போட்டோம் என்றனர்.

1969க்குப் பின் சிறு தோட்ட உரிமையாளர்களாக இருந்த தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டு முதலா ளிகளும் தோட்டங்களை விற்று விடவே பல தோட்டங்கள் துண்டாடப் பட்டன. தோட்டப்புறத் தமிழர்களில் ஒரு பகுதியினர் ‘தர்மார்டரில்' இந்தியா வுக்குத் திரும்பினர்.

துன் டாக்டர் மகாதீர் முகமட் நாட்டின் பிரதமரானபோது பல மேம்பாட்டுத் திட்டங்களால் உலக வரைபடத்தில் மலேசியாவைப் பிறர் உற்றுப்பார்க்க வைத்தார். பல அரசு நிறுவனங்கள் தனியார் மயமாயின. ஆனால் தனியாய் யார் மயமாயின என்பது இன்றுவரை புரியாத புதிர்தான். இந்நிலையில் பொருளாதாரத்தில் மண்ணின் மைந்தர் கைகள் ஓங்கின. என்றாலும் இவர் காலத்திலும் தமிழர் வாழ்வில் ‘வசந்தம்' வரவில்லை. அரசியல் நிலைத்தன்மை ஆழமான அடித்தளத்தைப் பெற்றிருந்த போதிலும் பெரும்பான்மை தமிழர்கள் தராசுக்கே வாக்களிப்பவர்களாக இருந்தும் இவர்கள் வாழ்க்கையில் மட்டும் மற்றங்கள் வரவில்லை.

தோட்டப்புறங்களிலும் நகர்ப்புறங்களின் விளிம்புகளிலும் வாழும் தமிழர்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலை கடந்த ஐம்பது ஆண்டுகளில் இப்படித்தான் தேய்மானத்தை நோக்கியதாகவே இருக்கிறது.

முன்னேற்றம் கொஞ்சம் கூடவா இல்லை? பிற இனத்தவரோடு ஒப்பிட்டால் இல்லை என்பதுதான் பதில். ஏற்பட்டிருக்கும் சில மாற்றங்களும் ‘நம் கையை ஊன்றி அடித்த கரணங்களால்' வந்தவை. நமது கூட்டுறவு சங்கங்களும் ம.இ.கா. அமைத்திருக்கும் உயர் கல்விக் கூடங்களும் இந்தியர்களின் சொந்த முயற்சியால் வந்தவையேயன்றி கப்பலுக்கும் தராசுக்கும் போட்ட வாக்குக்களால் அல்ல.
இந்நிலையில் வரவு செலவு கணக்கைப் பார்ப்போம்.

வரவு:
அரசாங்கம் வழங்கும் கொஞ்சநஞ்சம் வாய்ப்புகளும் அரசியல் கட்சிகள் மூலமாய் வருவதால் அரசியலில் நம் இளைஞர்களின் ஈடுபாடு அதிகமாகி யுள்ளது.

வானொலி தொலைக்காட்சிகளின் ஒலி, ஒளிபரப்பு நேரம் உச்சத்தை எட்டி யுள்ளது. நம்மில் பெரும்பாலோர்க்கு எத்தனை மணிக்குச் செய்தி வருகிறது, எத்தனை திரைப்படங்கள் காட்டப் படுகின்றன என்பதே மிக முக்கியத் தேவைகளாக இருப்பதால் தனியார் வானொலி, தொலைக்காட்சிகள் மூலம் இந்தத் தேவைகளை அரசு நன்கு நிறைவேற்றி வருகிறது.

செலவு:
தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 1957இல் 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. இப்போது 523 பள்ளிகளே உள்ளன. ஒவ்வொரு பள்ளியும் எடுபடும்போது அவற்றுக்குரிய உரிமம் முறிபடுகிறது. புதிய உரிமம் பெறுவது என்றுமே சாத்தி யமில்லை. இருப்பவையும் இனி இருக்குமா என்ற கேள்விக்குறியில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் 148 பள்ளிகள் மட்டுமே அரசு நிலத்தில் உள்ள ‘பந்துவான் பெனோ' பள்ளிகள். எஞ்சிய 375 பந்துவான் மோடால் பள்ளிகள். தனியார் நிலங்களில் எந்த நேரமும் ‘அகற்றப்படும்' நிலையில் உள்ளவை இவை. நாடாளுமன்ற உறுப்பினர் பெறும் ஒதுக்கீட்டிலிருந்து வரும் சொற்ப மானியத்தாலும் சரிந்துகொண்டிருக்கும் இக்கட்டடங்கள் அவ்வப்போது ‘நிமிர்த்தப்'படுகின்றன.

அரசு நிலத்தில் அரசே தரமான கட்டடங்களை நிறுவி அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் இப்பள்ளிகளை முழு உதவி பெறும் பள்ளிகளாக அரசு ஆக்க வேண்டும். கடந்த ஒரு நூற்றாண்டாக இந்த மண்ணை வளப்படுத்த உழைத்து வரும் ஒரு சிறுபான்மை இனத்தின் இந்தச் சிறிய கோரிக்கையைக்கூட அரசு மறுப்பது ஏன்? ஒரு பள்ளிக்கு ஒரு ஏக்கர் வீதம் 375 ஏக்கர் நிலம் கூட ஒதுக்க அரசு மறுத்து வருவதன் உள்நோக்கம் என்னவாக இருக்கும்? தமிழ்ப்பள்ளிகள் ‘இயற்கை மரணம்' அடையட்டும் என்று அரசு விரும்புகிறதா?

இந்த நாட்டுக்குக் கூலிகளாக அழைத்து வரப்பட்ட தமிழர்களுக்கு அப்போதைய ஆட்சியாளராகிய இங்கிலாந்து அரசு கொடுத்த உரிமையே தமிழ்ப்பள்ளிகள். இந்த உரிமை அரசியல் அமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது இன்று ‘சலுகை' என்ற நிலைக்கு உருமாற்றம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் நிபுணத்துவப் பயிற்சி வாய்ப்புகள் சுருங்கிவிட்டன. அரசுப்பணிகளிலும் அரசு சார்ந்த நிறுவனங்களிலும் நமது எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. இதற்கு ‘இந்தியர்கள் விண்ணப்பிப்பதில்லை' என்ற ஓர் அழகான பதிலை அரசுத்துறைத் தலைவர்கள் எப்போதும் கைவசம் வைத்திருக்கின்றனர்.

முன்பு பல சிறிய தோட்டங்கள் நம் வசம் இருந்தன. இப்போது இல்லை. ஒவ்வொரு நகரத்திலும் செட்டியார் தெரு என்று ஒன்று இருந்தது. அவை இப்போது கட்டெறும்பு கதையாகியிருக்கின்றன. முன்பு நமக்கென்று சில வங்கிகள் இருந்தன. இப்போது இல்லை. நமது முதலீட்டு நிலை 1.2 விழுக்காட்டுக்கு மேல் உயர முடியாமல் பல ஆண்டுகளாகத் தவித்துக் கொண்டிருக் கிறது. வழங்கப்பட்ட இரும்புக்கடை அனுமதிகள் கூட மறுக்கப்பட்டுள்ளன.

இந்துக்கள் வாழும் பகுதிகளில் கோயில்கள் அமைப்பதற்கு முறையான திட்டங்களோ சட்டவிதிகளோ இல்லை. புதிய வீடமைப்புப் பகுதிகளில் ஒதுக்கப்படும் வழிபாட்டு மையங்களுக்கான இடங்களை வேறு மதங்கள் கைப்பற்றிக்கொள்கொன்றன. இதனால் புறம்போக்கு நிலங்களில் இந்துக்கள் தாமே கோயில்கள் கட்டுவதும் அரசு அதனை உடைப்பதும் தலைவர்கள் ஓடிப்போய் பேச்சுவார்த்தை நடத்துவதும் மற்றொரு மகாத்தொடர் நாடகமாகிவிட்டது.

காவல் நிலையக் காவல் அறைகளில் உயிரை விடும் நம் இன இளைஞர்களின் எண்ணிக்கை உயர்கிறது. உரிய விசாரணைகள் இல்லை. கொலை, கொள்ளை போன்ற வன்செயல்களில் ஈடுபடும் நம்மவர்களின் எண்ணிக்கை வளர்ந்துள்ளது. இவற்றுக்கான காரணங்கள் முறையாக ஆராயப்படவில்லை. தடுப்பதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.


பொதுவாக ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிட்ட ஓர் இனத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவினர்க்குரியதாக உள்ளதேயன்றி சட்டத்தால் சலுகை பெறும் அந்த இனம் கூட முழுமையாக ஏழ்மையிலிருந்து விடுபடவில்லை.

ஒருமைப்பாடு பேசப்படுகின்றதேயன்றிச் செயலுக்கு வரமுடியவில்லை. கல்வி, வாணிபம், வேலை வாய்ப்புப் போன்ற எல்லாவற்றிலும் ஒரு குறிப்பிட்ட இனத்தினர் ‘சிறப்புச் சலுகைகளைப்' பெறுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மற்றவர்கள் காலவரையறை இன்றிப் பொறுமையாக இருக்க வெண்டும் என்பதே ஒருமைப்பாட்டுக்குரிய விளக்கமாக இருக்கிறது.

குறிப்பிட்ட கட்சி மாநாடு ஒன்றில் குத்து வாளை உருவி உயர்த்திக் காட்டுவதன் மூலம் பிற இனங்களை அச்சுறுத்தும் போக்கு ஐம்பது ஆண்டுக்கால அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சியைக் காட்டவில்லை. இப்போதும் தேர்தல் காலங்களில் மே 13 கலவரத்தை நினைவூட்டுவது மற்றோர் அச்சுறுத்தலே ஆகும்.

இந்திய இளைஞர்களின் வன்செயல்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறவர்கள் நாட்டின் பெரிய மனிதர்கள் மத்தியில் நடைபெறும் குற்றச்செயல்கள் பற்றிப் பேசுவதில்லை. வேலியே பயிரை மேயும் விபரீதங்கள் இப்போது வாடிக்கையாகிவிட்டதைக் கவனிக்க வேண்டும். கையூட்டுப் பண்பாடு கண்ணுக்குத் தெரியாத நிலையிலிருந்து கண்கூடான நிலைக்கு வளர்ந்துள்ளதை நாளேடுகள் அவ்வப்போது பறைசாற்றுகின்றன.

அகன்று நீண்ட நெடுஞ்சாலைகள், பெரிய விமான நிலையம் போன்றவை நமது பொருளாதார வளர்ச்சியின் அடையாளங்களாகப் பேசப்படுகின்றன. ஆனால், காற்று, நீர், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் தூய்மையும் அவற்றின் பயனாகிய மக்களின் உடல்நலம், மனநலம் ஆகியவையும் நாட்டின் செல்வங்களே என்று உணர்வதற்கு இந்த ஐம்பது ஆண்டுகளில் நமக்கு நேரமில்லாமல் போய்விட்டதாகவே தெரிகிறது.

மாற்றங்களைக் காண இன்னும் எத்தனை ஆகஸ்டுகள் காத்திருக்க வேண்டும்?

 
 

 

 

Home | About Us | Services | Forum | Press | UPSR, PMR, SPM, STPM, University | SPM & STPM Leavers | Career | Links | Contact Us

DISCLAIMER: tamiliyakkam.com shall not be liable for any loss or damage caused by the usage of any information obtained from this site. 

All Rights Reserved © Tamiliyakkam.com